திராவிட மாடல் என்பதே ஒரு மோசடி!


மு.க.ஸ்டாலின்

தனது சுயசரிதை புத்தகமான 'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியையும் பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களையும் மேடையில் வைத்துக் கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ’’திராவிட ஆட்சி முறைதான் எங்கள் கோட்பாடு. இந்த திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்” என்று சூளுரைத்தார். அதற்கும் முன்பாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையிலும், " தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் அங்கீகாரம் இது" என்று பெருமையுடன் குறிப்பிட்டார் ஸ்டாலின்.

கடந்த ஒன்பது மாத கால ஆட்சியில் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையாகவே அமைந்திருக்கின்றன. அதேநேரத்தில் திராவிடத்தை தொடர்ந்து அவர் பேசிவருவது பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் மட்டுமல்லாது, தமிழ்தேசியம் பேசுகிறவர்களிடமும் மிகக் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில்...

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ’’அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் ‘திராவிடமாடல்’ வளர்ச்சி என திராவிட மாடல் ஆட்சிக்கு விளக்கம் அளித்தார்.

மேலும், தொழில்துறை வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை போன்ற எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமில்லாமல் சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய ஐந்தும் முன்னேற்றமடைய வேண்டும். அம்மாதிரியான ஒரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பினர். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி" என்றும் ஸ்டாலின் சொன்னார்.

கருணாநிதியே திராவிடமாடல் பற்றி அதிகம் பேசியிருக்காத நிலையில் ஸ்டாலின் ஏன் இத்தனை விடாப்பிடியாக இதைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கும் காரணமிருக்கிறது. ஒரு தத்துவத்தை இன்னொரு தத்துவத்தின் மூலம்தான் எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பாஜக தனது தத்துவமாக இந்துத்துவத்தை முன்வைக்கும்போது, அதற்கு எதிரான தத்துவமாக திராவிடத்தை ஸ்டாலின் முன்வைக்கிறார், அதற்கு ஒருசாரார் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

தில்லையில் தமிழில் பாடினால் கைது, திருவையாற்றில் தெலுங்கில் மட்டுமே கீர்த்தனை. கோயில் கருவறைகளில் சமஸ்கிருதம், தமிழ்நாட்டில் தமிழை ஒழிப்பதே திராவிட மாடல். திராவிடமாடல் என்றால் தெலுங்கு மாடல் என்றே தெரிகிறது என்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

அப்படி கடுமையாக எதிர்த்து வருகிறவர்களில் ஒருவரான தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனிடம் இதுகுறித்துப் பேசினோம். இனி அவரது பேட்டி.

திராவிட மாடல் என்பதை ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறீர்கள்?

திராவிட மாடல் என்றால் என்ன என்பதற்கான தெளிவான வரையறையை அவர்கள் சொல்லவில்லை. அதன் பொருளாதாரக் கொள்கை என்ன? இனக்கொள்கை, மொழிக்கொள்கை என்ன? என்று சொல்ல வேண்டும். அதைச் சொல்லாமல் ஒவ்வொன்றையும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருப்பது தவறு என்பதால் தான் எதிர்கிறோம்.

பெ.மணியரசன்

அனைத்திலுமான, அனைவருக்குமான சீரான, பொதுவான வளர்ச்சி என்பதுதான் திராவிடமாடல் என்று முதல்வர் சொல்லியிருக்கிறாரே?

அதை எதிலிருந்து எடுத்திருக்கிறார்... எந்த தலைவருடைய கொள்கையிலிருந்து அல்லது எந்த நூலிலிருந்து அதை எடுத்தார்... அதன் வரையறை என்ன என்பதையெல்லாம் சொல்லவேண்டும். அவராகவே அப்படி ஒரு கற்பனை செய்து கொண்டிருப்பதை கோட்பாடாக எடுத்துக் கொள்ள முடியுமா? ஒரு கோட்பாடு என்றால் அதன் உட்கூறுகள் என்ன என்பதை வரையறுக்க வேண்டும். அப்படி அவரது மாடலுக்கு திராவிடம் என்று பெயர் வைப்பதற்கான காரணத்தையும் சொல்லவேண்டும்.

ஏன் திராவிட மாடல் என்று வைக்கக்கூடாது என்கிறீர்கள்?

அது வெறும் மூட நம்பிக்கையாக மட்டும் இருக்கிறது. சூத்திரமாக இல்லை. எல்லாத்தையும் திராவிடமாக சொல்கிறார்கள். கூட்டாட்சி தத்துவம் பற்றி முதன்முதலில் 1946-ல் மபொசி பேசினார், எழுதினார். காந்தியும் இதைத்தான் சொல்லியிருக்கிறார். 1944-ல் அவரிடம், “இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள் இருக்கிறதே இதை எப்படி ஒன்றாக வைத்திருப்பீர்கள்?” என்று கேட்டபோது, “இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும், அதேநேரத்தில் எல்லா இனங்களுக்கும் சுதந்திரம் வேண்டும்; ஆனால், பிரிந்து போய்விடக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு கூட்டாட்சி வேண்டும்” என்று சொன்னார். அப்போது மபொசியும், காந்தியும் சொல்லாத எதை ஸ்டாலின் இப்போது புதிதாகச் சொல்கிறார்?

‘டிரவிடியன் ஸ்டாக்’ என்று நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி அண்ணாகூட பேசியிருக்கிறாரே?

“திராவிட நாடு கேட்கிறீர்கள், மற்ற மாநிலங்களிலெல்லாம் உங்கள் கட்சிக்கு கிளைகள் இருக்கிறதா?” என்று அப்போது அவரிடம் கேட்கப்பட்டது. “இதுவரை இல்லை, இனிமேல் உருவாக்குவோம்” என்றார். அப்படி உருவாக்கி இருக்கிறார்களா? அங்கெல்லாம் திமுக இருந்தால் அங்குள்ள தமிழர்களை வைத்திருப்பார்கள். அந்த மாநிலத்தவரா அதில் இருக்கிறார்கள். அப்படி இல்லாதபோது அப்புறம் என்ன திராவிடம் வேண்டியிருக்கிறது என்பதுதான் எங்கள் கேள்வி.

1920-ல் காங்கிரஸ் மாநாட்டில் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். அதன்விளைவாக மாநிலக் கமிட்டிகளை மொழிவழி கமிட்டியாக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து திருவிக தலைவராக இருந்தபோது 1923-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்தார்கள். அதுவெல்லாம் உங்களுக்கு தெரியுமா... அப்போது இருந்த நீதிக்கட்சிக்குத் தெரியுமா?

1938 செப்டம்பர் 11 சென்னை கடற்கரையில் கூட்டம் நடந்தது. அதற்கு தலைமை வகித்த மறைமலை அடிகள், “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முன் மொழிந்தார். சோமசுந்தர பாரதியார் அதை வழிமொழிந்தார். வரலாறு இப்படி இருக்கும்போது எந்த கட்டத்தில் நீங்கள் திராவிட மாடலை கண்டு பிடித்தீர்கள்? அதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ், பாஜக கையிலெடுத்திருக்கும் இந்துத்துவா நிலைக்கு மாற்றாக திமுக இதை தனது அரசியல் நிலைப்பாடாக கையில் எடுக்கக்கூடாதா?

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தவர்கள், அவர்களின் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்கள். அதனால் இதற்கு அவர்களுக்கு தகுதியே இல்லை என்பதைத்தான் சொல்கிறோம். நாளையே பாஜகவுடன் கூட்டணி சேரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

அப்படியானால் திமுகவின் இந்த அரசியல் நிலைப்பாட்டையே தவறு என்கிறீர்களா?

தீவிர இந்துத்துவாவுக்கு எதிராக நடப்பது என்றால் தமிழர் சமயம் என்று பேசுங்கள். அல்லது இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சி கோட்பாட்டைப் பற்றி பேசுங்கள். பாஜகவின் கொள்கைக்கு மாற்றாக கூட்டாட்சி கோட்பாட்டை காங்கிரஸோடு சேர்த்து முடிவெடுத்துப் பேசுங்கள். அதைவிடுத்து தேவையில்லாமல் திராவிடம் என்று பேசாதீர்கள்.

ஒரே தேசம், ஒரே மொழி என்று பாஜக ஆர்எஸ்எஸ் வலியுறுத்தும்போது திமுக ஏன் திராவிடத்தை தூக்கிப் பிடிக்கக் கூடாது?

இந்தியாவை காப்போம், அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் என்பதுதான் தனது நிலைப்பாடு என்கிறார் ஸ்டாலின். அப்போது அங்கே ஏன் திராவிடம்... கூட்டாட்சிக் கோட்பாடு? மாநில தன்னாட்சி கோட்பாடு இருந்தால் அதைப்பேசுங்கள்.

மாநில சுயாட்சி கொள்கையை இன்றுவரை உறுதியோடு கடைபிடிக்கிறதே திமுக?

மாநில சுயாட்சி என்று சொல்வதே முதலில் தவறு. தேசிய இன தன்னாட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அதுபோல சொல்ல தயாரா? மாநிலம் என்பது ஒரு நிலப்பரப்பு. அதற்கு என்ன தன்னாட்சி? அது ஒரு இனம் அல்ல; மொழி அல்ல. இனத்துக்கும், மொழிக்கும் தன்னாட்சியா அல்லது நிலப்பரப்புக்கு தன்னாட்சியா? உங்களுக்கு துணிவிருந்தால் தமிழர் தன்னாட்சி அல்லது தேசிய இன தன்னாட்சி என்று சொல்லுங்கள்.

அப்படியானால் திராவிட மாடல் என்ற சொல்லாடலைத்தான் எதிர்க்கிறீர்களா?

திராவிட மாடல் என்பதே ஒரு மோசடி. அதனால் அதை எதிர்க்கிறோம். திராவிடம் என்பது தமிழர்களுடைய அடையாளத்தை அழிப்பது; மறைப்பது. தெலுங்கு, கன்னட மலையாள மொழி இனங்களுடன் கொண்டுபோய் கலந்து விடுவது, அதோடு தமிழை இணைப்பது, தமிழர்களின் தனித்தன்மையை அழிப்பதுதான் திராவிட மாடல் என்பதால் இதை எதிர்க்கிறோம்.

x