உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த யோகா: சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்


சென்னை: உலக உயர் ரத்த அழுத்த தினம் ஆண்டுதோறும் மே 17-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு மற்றும் முழு உடல் பரிசோதனை திட்டத்தின் 2 ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.

இதில், தமிழக சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், ‘‘உயர் ரத்த அழுத்தம் குறித்து மக்களுக்கு இன்னும் அதிக விழிப்புணவு தேவைப்படுகிறது. ரத்த அழுத்தத்தால் நுரையீரல் பாதிப்பும், தொடர்ந்து இதய பிரச்சினையும் ஏற்படலாம். 24 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 10 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தத்துடன் சர்க்கரை நோய் பாதிப்பும் உள்ளது.

எனவே, உப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை நிறைய சாப்பிட வேண்டும்.

முறையாக யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜி மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.