வாராணசியை வட்டமிடும் அரசியல் தலைவர்கள்


உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கானக் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 7இல் நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாராணசியில் பிரச்சாரத்திற்காகக் வட்டமிடத் துவங்கி உள்ளனர்.

பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாக இருப்பது வாராணசி. இந்நகரும் சேர்த்து உபியின் கிழக்குப்பகுதி 9 மாவட்டங்களின் 54 தொகுதிகளுக்கு நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இங்கு ஆளும் பாஜகவின் வெற்றிக்காக பிரதமர் மோடி வந்து தங்கியுள்ளார். இன்று காலை அவர் வாராணசியின் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தன் பிரச்சாரத்தை துவக்கினார். நகரின் வீதிகளிலும் நுழைந்த பிரதமர் மோடி, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இவரை உற்சாகத்துடன் பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

முன்னதாக, பிரதமர் மோடி அருகிலுள்ள மிர்சாபூரிலும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். கடைசிகட்ட தேர்தலில் மற்றொரு மாவட்டமான காஜிபூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரப் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டுள்ளார். வாராணசியின் எல்லை மாவட்டமான சண்டவுலியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் செய்கிறார். இந்த கிழக்குப்பகுதியில் பாஜக வசம் அதிகம் கொண்ட சட்டப்பேரவை தொகுதிகளை தக்கவைப்பது ஆட்சியாளர்களுக்கு பெரும் சவாலாகிவிட்டது.

முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், மாவ் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதியான முக்தார் அன்சாரி இங்கு 1996 முதல் இத்தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முக்தார் அன்சாரி, இந்தமுறை போட்டியிடவில்லை. தனக்கு பதிலாக தன் மகன் அப்பாஸ் அன்சாரியை முதன்முறையாகப் போட்டியில் இறக்கியுள்ளார். இவரது வெற்றிக்காக முன்னாள் முதல்வரான அகிலேஷும் பிரச்சாரம் செய்தார். சமாஜ்வாதியின் கூட்டணியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் சார்பில் அப்பாஸ் போட்டியிடுகிறார்.

இவரது தந்தையும் சமாஜ்வாதி நிறுவனருமான முலாயம்சிங் யாதவும் ஜோன்பூரில் இன்று பிரச்சாரத்தில் உள்ளார். தனது உடல்நிலை காரணமாக இந்த தேர்தலில் அவர் தீவிரப் பிரச்சாரம் செய்யவில்லை. தனது மகன் அகிலேஷ் போட்டியிடும் மெயின்புரியின் கர்ஹால் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்திருந்தார். இப்போது இரண்டாவது முறையாக ஜோன்பூரில் பிரச்சாரம் செய்கிறார் முன்னாள் உபி முதல்வரான முலாயம். இங்கு தன் நெருங்கிய நண்பரும் முன்னாள் மாநில அமைச்சருமான லக்கி யாதவின் மகன் பாரஸ்நாத் யாதவ் போட்டியிடுவதுதான் காரணம்.

நேற்று சமாஜ்வாதிக்கு ஆதரவாக வாராணசியில் மேற்கு வங்க மாநில முதல்வரான மம்தா பானர்ஜியும் பிரச்சாரம் செய்தார். அகிலேஷுடன் மேடை ஏறிய திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இவருக்கு பாஜகவினர் கருப்புக்கொடி காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே மூன்றாம் கட்ட தேர்தலில் சமாஜ்வாதிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவும் முதல்வர் மம்தா உபி வந்திருந்தார்.

கடைசிகட்டத் தேர்தலில் தனது செல்வாக்கானத் தொகுதிகளை மீட்க காங்கிரஸும் களம் இறங்கியுள்ளது. இக்கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி தனது சகோதரியும் உபி தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா வத்ராவுடன் இன்று பிரச்சாரம் செய்கிறார். இவர்கள் இருவரும் இன்று வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனத்தை முடித்து விட்டு தம் பிரச்சாரத்தை துவக்கினர். இந்த தேர்தலில் அதிகமாக விலகி இருக்கும் ராகுல், தம் முன்னாள் மக்களவை தொகுதியான அமேதியில் மட்டும் பிரச்சாரம் செய்தார். இன்று இரண்டாவது இடமாக கடைசிகட்ட தேர்தலில் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

எதிர்க்கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மட்டும் நேரில் வரவில்லை. மாறாக, ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு கடைசிகட்ட தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார். பிப்ரவரி 7 இல் இந்த வாக்குப்பதிவுடன் உபியின் 403 தொகுதிகளுக்கானத் தேர்தல் நிறைவடைகிறது. இதன் முடிவுகள் மற்ற நான்கு மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 10 இல் வெளியாக உள்ளது.

x