ஒதுக்கியது காங்கிரசுக்கு... ஜெயித்தது திமுக


சற்குணம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 23 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 19, அதிமுக 7, காங்கிரஸ் 2, அமமுக 2, பாஜக 1, சுயேச்சை 2 பேர் வெற்றி பெற்றனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பாக காமராஜரின் நெருங்கிய நண்பரான என்.ஆர்.தியாகராஜனின் மருமகளான 22வது வார்டு கவுன்சிலர் சற்குணம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் வீரக்குமார் தலைமையில் இன்று நகராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த 19 பேர், காங்கிரஸ் 2, அமமுக 2, பாஜக, அதிமுகவைச் சேர்ந்த தலா ஒருவர், சுயேச்சைகள் 2 பேர் கலந்து கொண்டனர். அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் தலைவரை முன் மொழிய வேண்டிய திமுகவினர் அதற்கான ஏற்பாடு செய்யாமல் இருந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினர் மறியல்

இதனால் தேர்தல் நடவடிக்கை துவங்கியவுடனே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சற்குணம், மற்றொரு காங்கிரஸ் கவுன்சிலர் நாகராஜ், சுயேச்சை கவுன்சிலரான சுப்புலட்சுமி ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ரேணுபிரியா

கூட்டணி தர்மத்திற்கு எதிராக திமுக செயல்படுவதாகக்கூறி தேனி - பெரியகுளம் சாலையில் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே திமுக நகர் பொறுப்பாளர் பாலமுருகனின் மனைவியான 10வது வார்டு கவுன்சிலர் ரேணுபிரியா மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர், போட்டியின்றி நகர்மன்ற தலைவரானார். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நகர்மன்ற தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது தேனியில் காங்கிரஸாரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் வலியுறுத்தியுள்ளார்.

x