21 மேயரில் ஒரு முஸ்லிம் கூட இடம் பெறாதது ஏன்?


அப்துல் சமது எம்எல்ஏ

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 21 மேயர் பதவிகளுக்கு 9 ஆண்கள், 11 பெண்களை வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்தது.

சென்னை மேயராக ஆர்.பிரியா, மதுரை மேயராக இந்திராணி, திருச்சி மேயராக மு. அன்பழகன், நெல்லை மேயராக பி.எம்.சரவணன், கோவை மேயராக கல்பனா, சேலம் மேயராக
ஏ.ராமச்சந்திரன், திருப்பூர் மேயராக தினேஷ்குமார், ஈரோடு மேயராக நாகரத்தினம், தூத்துக்குடி மேயராக என்.பி.ஜெகன், ஆவடி மேயராக ஜி. உதயகுமார், தாம்பரம் மேயராக வசந்தகுமாரி, காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி, வேலூர் மேயராக சுஜாதா, கடலூர் மேயராக சுந்தரி, தஞ்சாவூர் மேயராக சண். ராமநாதன், கும்பகோணம் மேயராக சரவணன், கரூர் மேயராக கவிதா, ஓசூர் மேயராக எஸ்.ஏ.சத்யா, திண்டுக்கல் மேயராக இளமதி, சிவகாசி மேயராக சங்கீதா இன்பம், நாகர்கோவில் மேயராக மகேஷ் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுள்ளனர். ஆனால், இதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.

பாஜகவிற்கு எதிராக செயல்படும் திமுகவிற்கு சிறுபான்மை மற்றும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கு ஆதரவான கட்சி என்ற முகம் உண்டு. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் துணைப்பதவிகளைக் கூட்டணி கட்சியினருக்கு பகிர்ந்து கொடுத்து நல்ல பெயரெடுத்த திமுக, மேயர், துணைமேயர் தேர்வில் கோட்டை விட்டதாக சிறுபான்மை மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.

கால, காலமாக திமுகவிற்கு ஓட்டு போடும் இயந்திரமாக முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தான் திமுக தங்களைக் கண்டு கொள்ளவில்லையோ என்ற எண்ணம் தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 சதவீத முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். அதனால், 21 மாநகராட்சிகளில் 2 இடங்களில் முஸ்லிம்களுக்கு மேயராக திமுக வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்படவில்லை என்ற வருத்தமும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அப்துல் சமதுவிடம் கேட்டதற்கு, ‘தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி மேயர்களில் முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் பேசினோம். அத்துடன் துணைமேயர் பதவிகளிலும் முஸ்லிம்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால், மேயர் பதவி மட்டுமின்றி துணைமேயர் பதவியும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் நகராட்சி, பேரூராட்சிகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளனர். ஆனால், 21 மேயரில் ஒரு முஸ்லிம் கூட இடம் பெறவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை. மேயர், துணைமேயர்களில் முஸ்லிம்கள் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது. நாடு இன்று இருக்கும் சூழலில் இவ்வளவு தான் சொல்ல முடியும்’ என்று கூறினார்.

x