திமுகவுக்குள் உள்குத்து: தேர்தல் ஒத்திவைப்பு


திருமங்கலம் நகராட்சி அலுவலகம்

திமுக போட்டி வேட்பாளரால், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் கூட்டத்தைப் புறக்கணித்தார். இதனால் மதுரை திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக 18, அதிமுக 6, தேமுதிக 2, காங்கிரஸ் 1 வார்டில் வெற்றி பெற்றன. இதில் தேமுதிக உறுப்பினர் ஒருவர் சேர்ந்ததால் திமுகவின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இந்நிலையில், திருமங்கலம் நகராட்சி தலைவர் வேட்பாளராக ரம்யா முத்துக்குமாரை திமுக தலைமை அறிவித்தது.

ஆனால், திருமங்கலம் நகர திமுக செயலாளர் முருகனின் மருமகள் ஷர்மிளா, தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இன்று நகராட்சி தலைவர் தேர்வு என்பதால், ஷர்மிளா மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள், தேமுதிக கவுன்சிலர் ராஜகுரு என 13 பேர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இதனால், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான ரம்யா முத்துக்குமார் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்கள் 14 பேர் தேர்தலைப் புறக்கணித்தனர். போதிய உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காததால், தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் தேர்தல் அதிகாரியான நகராட்சி ஆணையர் டெரன்ஸ் லியோன் ஒத்திவைத்து அறிவித்தார்.

x