3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கரூர், குளித்தலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

கரூர்: 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கரூர், குளித்தலை வழக்கறிஞர்கள் சார்பில் இன்று (ஜூன் 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் நாளை நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

3 புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் நகுல்சாமி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. துணைத் தலைவர்கள் யு.எஸ்.தர்மசேனன், ஏ.கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பி.நாகேஸ்வரன், இணைச் செயலாளர் ஏ.ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் இக்கோரிக்கைளை வலியுறுத்தி நாளை (ஜூன் 21) பணி புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குளித்தலை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.