காரைக்குடி நகர்மன்ற தலைவர் வேட்பாளரை அறிவிக்க தயங்கும் திமுக!


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில் ஒன்றை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டது திமுக. மீதி மூன்றில் இரண்டுக்கு மட்டும் வேட்பாளரை அறிவித்திருக்கும் திமுக, முக்கிய நகராட்சியான காரைக்குடிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறது.

36 வார்டுகளைக் கொண்ட காரைக்குடி நகராட்சியில் தனிப்பெரும்பான்மைக்கு உண்டான இடங்களை இப்போது கைவசம் வைத்திருக்கிறது திமுக. இங்கே 7 கவுன்சிலர்களை வைத்திருக்கும் அதிமுகவால் நேரடி சிக்கல் ஏதும் திமுகவுக்கு ஏற்படாது. ஆனால், திமுக கவுன்சிலர்களாலேயே தங்களுக்கு சிக்கல் வரலாம் என அஞ்சுகிறதாம் ஆளும்கட்சி.

குணசேகரன்

நகர திமுக செயலாளர் குணசேகரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, முன்னாள் எம்எல் ஏ-வான துரைராஜின் மகன் ஹரிதாஸ் ஆகியோர் காரைக்குடி சேர்மன் வேட்பாளர் ரேஸில் இருக்கிறார்கள். இந்த மூன்று பேருமே சேர்மன் பதவியைக் குறிவைத்து பணத்தையும் இறைத்து வைத்திருக்கிறார்கள். இதில், ஜூனியரான ஹரிதாஸை ஓரளவுக்கு சமாதானம் செய்துவிடலாம் என்றாலும் மற்ற இருவரையும் சமாதானம் செய்ய முடியாமல் தடுமாற்றத்தில் இருக்கிறார் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன்.

முத்துத்துரை

எனினும் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை மீறி யாரும் குறுக்குச்சால் ஓட்டிவிடக் கூடாது என்பதற்காக திமுக கவுன்சிலர்கள் அனைவரையும் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள ஒரு பள்ளியில் காபந்து செய்து வைத்திருக்கிறார் பெரியகருப்பன். செல்போன் சிக்னல் சரிவர கிடைக்காத இடம் இது என்பது குறிப்பிடத் தக்கது. கவுன்சிலர்கள் வெளியில் இருந்தால் அதிமுக கவுன்சிலர்களிடமும் பேரம் பேசி குறுக்கு வழியில் சேர்மன் பதவியை கைப்பற்ற முயற்சிக்கலாம் என்பதால் இந்த ஏற்பாடு. ரேஸில் இருக்கும் மூன்று பேரும் சிறுமலை பள்ளியில் தான் இருக்கிறார்கள்.

இந்த மூவரில் ஒருவருக்கு சேர்மன் பதவி இன்னொருவருக்கு வைஸ் சேர்மன் பதவி, இன்னொருவருக்கு ஆவின் சேர்மன் பதவி என சமரசம் பேசப்பட்டதாகவும் சொல்கிறார்கள். என்றபோதும் உடன்பாடு எட்டப்படாததாலேயே வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

கடைசி நேரத்தில் வேட்பாளர் பெயரை அறிவிப்பது அல்லது கடைசி நேரம் வரை அதிகாரபூர்வமாக வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் வைத்திருந்து கடைசி நேரத்தில் வேட்பாளர் பெயரை கவரில் எழுதிக் கொடுத்து அவருக்கு வாக்களிக்கும்படி திமுக கவுன்சிலர்களுக்கு கட்டளை பிறப்பிப்பது என்ற இரண்டு உத்திகளை திமுக தரப்பில் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதனால், நாளைய தினம் என்ன அதிசயம் நடக்கப் போகிறதோ என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் வாக்களித்த காரைக்குடி நகராட்சி மக்கள்!

x