கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி: சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியின் பரிதாப நிலை!


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்த 2 பெண்கள் உட்பட 31 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை தொடரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, அப்பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டியை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, அதை விழுப்புரம் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் மெத்தனால் ரசாயன பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

அதேவேளையில், ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது.

மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிச்செல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆனந்தன், சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தரும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான பாஸ்கரன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி: கள்ளக்குறிச்சி கோட்டைமேடு கருணாபுரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி. இப்பகுதி தொழிலாளர்கள் பலர் வேலை செய்துவிட்டு, உடல் வலியைப் போக்கு மது அருந்துவது வழக்கம். அந்த வகையில் தான் பலர் மது அருந்தி வந்துள்ளனர். கள்ளச் சாராயம் விலை மலிவு என்பதோடு, அதன் போதை வீரியம் அதிகம் என்பதால் அப்பகுதி மக்கள் கள்ளச் சாரயத்தை வாங்கி பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலுக்கு பெயர்போனது என்பது ஊரறிந்த ரகசியம் என்ற போதிலும், அவ்வப்போது போஸீஸார் மதுவிலக்கு சோதனை என்ற பெயரில் பல ஆயிரம் லிட்டர் பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சாராயத்தை கண்டுபிடித்து, அழித்து வந்த போதிலும், அங்கு கள்ளச் சாரயத்தை இதுவரை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.