மாணவி சோபியா கைதில் மனித உரிமை மீறல்: ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா

பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவுக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கத் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை வரவேற்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பயணித்த தூத்துக்குடி விமானத்தில், ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா தனது பெற்றோருடன் பயணித்துள்ளார். அப்போது, பாஜக ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பியதாகவும் அதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இதையடுத்து காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாணவி சோபியா பின்னர் பிணையில் வெளிவந்தார். இந்நிலையில் பொய் வழக்கு மூலம் சோபியாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை முழுமையாக விசாரித்து மனித உரிமை ஆணையம் விசாரணை என்ற பெயரில் புதுக்கோட்டைக் காவல் நிலையத்தில் பல மணிநேரம் சோபியாவை காக்க வைத்துள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளனர். மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் சோபியாவுக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த புகாரில் எதிர் மனுதாரராக குற்றம் சாட்டப்பட்ட புதுக்கோட்டைக் காவல் ஆய்வாளர் திருமலை இடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயையும் மற்ற காவல் துறையைச் சேர்ந்த 6 நபர்கள் இடம் தலா 25 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சோபியாவிற்கான இழப்பீடு ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்பட வேண்டுமெனவும் தனது உத்தரவில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து அப்போதைய அதிமுக அரசாங்கத்தில் காவல்துறை அரசின் ஏவல் துறையாகத் தான் செயல்பட்டிருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது.

ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசுக்கு அடிமை சேவகம் செய்து நற்பேறு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் சோபியாவின் கைது நடவடிக்கை இருந்திருக்கிறது என்பதும் புலனாகிறது. மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிற அனைவருக்கும் புது உற்சாகத்தை வழங்கியிருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இந்த உத்தரவை மனமார வரவேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.

x