அதிமுக - திமுக ரகளை: அதகளமான அன்னவாசல்!


சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது அதிமுகவினரும், திமுகவினரும் செய்த ரகளையால் அன்னவாசல் பகுதியே அதகளம் ஆனது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுகவும், 6 இடங்களில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், சுயேச்சையாக வெற்றி பெற்றவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். அதனால் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் எப்படியாவது பேரூராட்சியை திமுக கைப்பற்ற வேண்டும் என்று மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக அதிமுகவினருக்கு தகவல் போனது.

அதனால் தங்கள் உறுப்பினர்கள் அனைவரையும் பாதுகாப்புடன் ஒரே இடத்தில் வைத்திருக்கும் அதிமுகவினர், பேரூராட்சியின் அதிமுக உறுப்பினர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்திருந்தனர். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனால் இன்று பதவியேற்பு நடைபெற உள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பாதுகாப்பு கருதி முற்பகலில் திமுகவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 பேரும் முதலில் தனியாகப் பதவியேற்றனர். அப்போது, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், ஒன்றிய செயலாளர் கே.சந்திரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பின்னர், பிற்பகலில் அதிமுக உறுப்பினர்கள் பதவியேற்பு தனியாக நடைபெற்றது. விராலிமலையில் இருந்து சுமார் 35-க்கும் மேற்பட்ட கார்களில் அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒருவர் என மொத்தம் 9 பேரையும் அதிமுகவினர் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு முன்னதாகவே அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு, உறுப்பினர்கள் 9 பேர் மட்டும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது, பாதுகாப்பு அரண்களை மீறிக்கொண்டு திமுகவினர் உள்ளே புகுந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அலுவலக வளாகத்தில் அத்துமீறி நுழைந்துள்ள திமுக நிர்வாகிகளை உடனடியாக வெளியேற்றுமாறும், நீதிமன்ற உத்தரவுப்படி பாதுகாப்புடன் அனுப்பி வைக்குமாறும் அதிமுக உறுப்பினர்கள் அங்கிருந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர்.

இதற்கிடையில் திமுக உறுப்பினர்கள் 2 பேரை அதிமுகவினர் கடத்தி வந்திருப்பதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர். இப்படி இரண்டு தரப்பினரும் மாறிமாறி குற்றம்சாட்டி கொண்டதன் காரணமாக அதிமுக- திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

பின்னர் ஒருவழியாக 2 கார்களில் ஏற்றி அதிமுக உறுப்பினர்கள் 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அதிமுக உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளித்த போலீஸாரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களின் மறியல் போராட்டத்தினால் விராலிமலை-புதுக்கோட்டை இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரும்பான்மை இருப்பதால் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று அதிமுகவும், அவர்களை வெற்றி பெற விடக்கூடாது என்று திமுகவினரும் கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதால் நாளை மறுதினம் (மார்ச் 4) நடைபெற உள்ள தலைவர் தேர்தலில் கடுமையான மோதல் ஏற்படலாம் என அச்சப்படுகிறார்கள் அன்னவாசல் மக்கள்.

x