புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிதான் எங்க குலசாமி என்று சொல்லும்படியாக அவர் படத்தை வைத்து அலகு காவடி, பறவைக் காவடி என பல்வேறு விதமான காவடிகளை எடுத்து அவருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர் புதுச்சேரியைச் சேர்ந்த ‘வவுச்சர்’ ஊழியர்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் பொதுப்பணித் துறையில் வவுச்சர் ஊழியர்கள் எனப்படும் தற்காலிக ஊழியர்கள் 1,378 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த முறை ரங்கசாமி பதவியில் இருந்தபோது நியமிக்கப்பட்ட அவர்களுக்கு மாதம் 3,500 ரூபாய் வரையில் மட்டுமே ஊதியம் கிடைத்து வந்தது. அவர்கள் பணி நிரந்தரம் எதுவும் செய்யப்படாமல் தற்காலிக ஊழியர்களாகவே பணியில் தொடர்ந்து வந்தனர்.
அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை, ஆர்ப்பாட்டம் என அனைத்து விதமான போராட்டங்களையும் அவர்கள் மேற்கொண்டனர். ஆனால் அதற்கு எந்தவிதமான பயனும் இல்லை.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது மீண்டும் ரங்கசாமி முதல்வராக இருப்பதால் அவரைச் சந்தித்து தங்கள் குறைகளை முறையிட்டனர். இதனையடுத்து புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்களுக்கு தொகுதிப்பூதியமாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அறிவிக்கப்பட்ட அத்தொகை கடந்த சில மாதங்களாக வழங்கப்படாமல் இருந்ததால் அந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொதுப்பணி துறை வவுச்சர் ஊழியர்கள் 1,378 பேருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்குவதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று பிறப்பித்திருந்தார். அதைத் தொடர்ந்து, ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இன்று 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டது.
அறிவித்தபடி சம்பள உயர்வு வழங்கிய முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பஞ்சாலை வளாகத்தில் இருந்து வவுச்சர் ஊழியர்கள் அனைவரும் அலகு குத்தி காவடி எடுத்து மணக்குள விநாயகர் ஆலயம் வரை ஊர்வலமாகச் சென்றனர். காவடியில் சாமி படங்களுக்கு பதிலாக ரங்கசாமியின் படத்தை வைத்து அவர்கள் ஊர்வலமாகச் சென்றது அவர்களின் நன்றியுணர்வை தெரிவிக்கும் விதமாக இருந்தது.
படங்கள்: எம்.சாம்ராஜ்