`புதின் ஸ்டாப் வார்'- சென்னை தேவாலயத்தில் பதாகைகளுடன் பிரார்த்தனை


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனே போரை நிறுத்த வலியுறுத்தியும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் 300 பேர் பதாகைகளை ஏந்தி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

நேட்டோவில் உக்ரைன் சேர விருப்பம் தெரிவித்ததையடுத்து ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. 7வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். போர் பதற்றம் காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைனில் தங்கி மருத்துவம் படிக்கும் மாணவர்கள் உட்பட அங்கு வசித்து வரும் இந்தியர்கள் அனைவரையும் மீட்டு இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து இந்திய மாணவர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பி வரும் நிலையில் நேற்று துரதிருஷ்டவசமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் ரஷ்ய படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை சென்னை சாந்தோக் தேவாலயத்தில் கூடிய 300 பேர் கைகளில் "புதின் ஸ்டாப் வார்" எனவும், "ரஷ்யா போரை நிறுத்து" என்ற வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி சுமார் 1 மணி நேரம் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், சென்னையிலும் பொதுமக்கள் ஒன்று கூடி பதாகைகளுடன் பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

x