உக்ரைன் போரின் தாக்கம் உலக நாடுகளில் எதிரொலிக்கிறதோ இல்லையோ, உத்தர பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தில் நன்றாகவே எதிரொலிக்கிறது. உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுவரும் நிலையில், உத்தர பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தில் அதைத் தனது அரசின் சாதனையாகச் சொல்லி வாக்கு கேட்டுக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், மாணவர்களை மீட்கும் விஷயத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றன.
இன்று சோன்பத்ராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, அதிகரித்துவரும் இந்தியாவின் வலிமைதான் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க உதவுகிறது என்றும், இந்தியர்களை மீட்பதில் எல்லா விதமான முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் பேசியிருக்கிறார்.
இதுவரை, 6,000 இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது. இந்தியர்களை மீட்பது தொடர்பாக, மூன்று நாட்களில் நான்கு கூட்டங்களை நடத்தி ஆலோசனை நடத்தியிருக்கிறார் மோடி. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கை மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உக்ரைனின் அண்டை நாடுகள் வழியே இந்தியர்களை மீட்க இந்திய விமானப் படை விமானங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர். மோடியின் உத்தரவின் பேரில் நான்கு மத்திய அமைச்சர்கள் மீட்புப் பணியை மேற்கொள்ள உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
எனினும் இன்னும் மீட்கப்படாமல் இருக்கும் இந்திய மாணவர்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றன. “தற்போது ஏறத்தாழ 18,000 பேர்தான் உக்ரைனில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். வளைகுடாப் போரின்போது, 1990 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 1.70 லட்சம் இந்தியர்கள் குவைத்திலிருந்து மீட்கப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ராலின் மேற்பார்வையில் மொத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது” என்று மோடி அரசுக்குக் கோடிட்டுக் காட்டிய திரிணமூல் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த் சின்ஹா, இந்த மீட்புப் பணிகளைத் தேர்தல் பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டி வாக்குசேகரிப்பது குறித்தும் மோடியை விமர்சித்திருந்தார்.
உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் உக்ரைன் காவலர்களால் தாக்கப்படுவதாக வெளியான காணொலியைப் பகிர்ந்து ராகுல் காந்தியும் விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே, நேற்று கார்கிவ் நகரில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் குமார் குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் மத்திய அரசின் மீது மேலும் விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. போர்ப் பதற்றத்துக்குள்ளாகாத பகுதிகளிலிருந்து மட்டுமே மாணவர்கள் மீட்கப்படுவதாகவும், போரில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இதைத் தனது வழக்கமான பாணியில் எதிர்கொள்ளும் மோடி, “நமது ஆயுதப் படையின் வீரத்தையும், ‘மேக் இன் இந்தியா’வையும் பற்றி கேள்வி எழுப்புபவர்களால் நாட்டுக்கு வலிமை சேர்க்க முடியாது” என்று பிரச்சாரங்களில் சாடிவருகிறார்.
சொல்லப்போனால், போர் தொடங்குவதற்கு முன்பே உக்ரைன் விவகாரத்தைப் பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் பேசி, பாஜகவுக்கு வாக்குளிக்குமாறு உத்தர பிரதேச மேடைகளில் முழங்கியவர் மோடி. போர் தொடங்குவதற்கு முதல் நாள் (பிப்.23) உத்தர பிரதேசத்தின் பஹராய்ச் நகரில் பேசிய மோடி, “உலகில் தற்போது ரொம்பவே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இப்படியான ஒரு சூழலில், ஒட்டுமொத்த மனிதகுலமும் வலிமையுடன் இருப்பதுதான் இந்தியாவுக்கு முக்கியம். உங்கள் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவை வலிமையாக்கும். இந்தியா போன்ற நாட்டில் பொறுப்பைச் சுமக்க வலிமையான தலைவர்கள் தேவை. எனவே, பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என்று வலியுறுத்தினார்.
சமாஜ்வாதி கட்சியின் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, “உத்தர பிரதேசத் தேர்தலில் உக்ரைன் விவகாரத்தை மோடி கொண்டுவருகிறார். ரொம்பவே வசதிதான்! மின்சாரக் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குத் தீர்வு, பொருளாதாரம் - வளர்ச்சி- வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் என எதையும் உத்தர பிரதேச வாக்காளர்கள் கேட்கக் கூடாது” என்று ட்விட்டரில் கிண்டல் செய்திருந்தார்.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் அரசை விமர்சிப்பதில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் சிவசேனா கட்சியும் சேர்ந்திருக்கிறது. சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் சரமாரியான விமர்சனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ எனப் பெயர் வைத்ததே உத்தர பிரதேசத் தேர்தலை மனதில் கொண்டுதான் எனும் அளவுக்கு ‘சாம்னா’ வாரியிருக்கிறது.
“ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நமது மாணவர்களை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நடக்கும் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்” என்றும் ‘சாம்னா’ தலையங்கம் சாடுகிறது.
செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தால் கூட ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் பாஜக அரசு மீட்கும் என்று விமானப் போக்குவரத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கும் ‘சாம்னா’, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குல்பூஷன் யாதவ் ஏன் விடுவிக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது.
போரில் ஈடுபட்டிருக்கும் எந்த நாட்டுடனும் அணிசேரா கொள்கை கொண்டிருந்ததாக நேருவை விமர்சித்துக்கொண்டிருக்கும் பாஜக அரசும் உக்ரைன் விவகாரத்தில் அதையே செய்கிறது என்றும் அந்த நாளிதழ் விமர்சித்திருக்கிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, உக்ரைன் நிலவரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது!