மார்ச் 7 முதல் காணொலி காட்சி விசாரணை நிறுத்தம்: உயர்நீதிமன்றம் அறிவிப்பு


சென்னை உயர் நீதிமன்றத்தில், காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளும் விசாரணையை திங்கள் கிழமை முதல் நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன் வைத்த வாதங்களை கேட்க முடியாத வகையில் இடையூறு ஏற்பட்டதாக அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள தொடர்பு உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்வதாக சக நீதிபதிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

அதனால், திங்கள் கிழமை முதல் காணொலி காட்சி விசாரணை முறையை நிறுத்த இருப்பதாகவும், உண்மையில் காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

இதுசம்பந்தமாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் விளக்கமளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக இரு ஆண்டுகளாக காணொலி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை முறை நிறுத்தப்பட்டு, நேரடி விசாரணை மூலம் மட்டும் நடத்தப்பட உள்ளது.

x