ஒரு கேள்வி... ஒரு பதில்: உக்ரைன் போருக்கு யார் காரணம்?


பெ.சண்முகம்

உக்ரைனைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் நடத்தி வரும் பல்முனை தாக்குதல், உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் உக்ரைனை விட்டு ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அண்டை நாடுகளுக்கு அடைக்கலமாகி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனுக்கு மருத்துவக்கனவோடு சென்ற இந்திய மாணவர்களும் தாயகம் திரும்பி வருகின்றனர். உக்ரைனில் நடக்கும் போரில் கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் நவீன், ரஷ்யா படை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாய சங்க மாநில பொதுச்செயலாளருமான பெ.சண்முகத்திடம் பேசினோம்.

‘உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்குக் காரணம் என யாரைச் சொல்வீர்கள்?' என்று நாம் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:

இந்த போர் நடக்க காரணம் ரஷ்யா அல்ல. அமெரிக்கா தான். உலகம் முழுவதும் தனது ஆயுதச்சந்தையை விரிவுபடுத்துவதற்கான அமெரிக்காவின் வெறி தான் தற்போது உக்ரைனில் நடக்கும் போருக்குக் காரணம்.
நேட்டோ கூட்டணியில் உக்ரைன் சேர்வதன் மூலம் அமெரிக்க துருப்புகளை ரஷ்யா எல்லைப் பகுதியில் நிறுத்தும் முடிவுக்கு எதிராகத் தான் ரஷ்யா தற்போது உக்ரைனை தாக்கி வருகிறது. ஆனால், பொதுமக்கள் மீது அது நடத்தும் தாக்குதலை ஏற்க முடியாது. இந்த போரில், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்வதோடு மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் உதவி செய்து வருவதாக செய்திகள் வருகின்றன. அதற்கு காரணம் போரை முடிவுக்கு வராமல் தடுப்பதுதான்.
ஆனால், உலகம் முழுவதும் உள்ள மக்களின் விருப்பம், உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான்.

ரஷ்யா உடனடியாக தனது தாக்குதலை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தைகளின் மூலமே தனது கோரிக்கையை அது நிறைவேற்ற வேண்டும். அதற்கு நேட்டோவில் சேராத இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன் வரவேண்டும்.

இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.

x