தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்று வருகிறார்கள். நாளை மறுநாள் மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றது. 1,373 மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள், 3,843 நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், 7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்து வருகின்றனர்.
நகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த நகராட்சி ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்கள்.
மேலும், மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேயர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்வு நடக்கிறது. போட்டியிருப்பின் தேர்தல் நடைபெறும். போட்டி இல்லாத பட்சத்தில் ஒருமனதாக தேர்வுசெய்யப்படுகிறார்கள்.