மார்ச் 3ல் யோகி, 5 அமைச்சர்கள் தொகுதிகளில் வாக்குப்பதிவு


உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கான ஆறாம்கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. மார்ச் 3 இல் நடைபெறும் வாக்குப்பதிவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அவரது ஐந்து அமைச்சர்களின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.

இதில், கோரக்பூர், அம்பேத்கர்நகர், பலியா, பல்ராம்பூர், பஸ்தி, தியோரியா, மகராஜ்நகர், சந்த் கபீர்நகர், குஷிநகர் மற்றும் சித்தார்த்நகர் ஆகிய பத்து மாவட்டங்களின் 57 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதன் முக்கிய வேட்பாளர்களாக முதல்வர் யோகி, அவரது அமைச்சரவையின் உறுப்பினர்கள் ஐந்து பேரும் உள்ளனர். இந்த ஐந்து அமைச்சர்களில் விவசாயத்துறையின் சூர்யபிரதாப் ஷாஹி, அடிப்படைக் கல்வித்துறையின் சதீஷ் சந்திர துவேதி, சுகாதாரத்துறையின்ஜெய் பிரதாப்சிங் மற்றும் இணை அமைச்சர்களான ஸ்ரீராம் சவுகானும், ஜெய் பிரகாஷ் நிஷாத்தும் உள்ளனர்.

இதற்கான தியோரியா பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் யோகி பேசுகையில், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் ஒரு மதக்கலவரமும் நடைபெறவில்லை. ஆனால், சமாஜ்வாதி ஆட்சியில் 700, பகுஜன் சமாஜ் ஆட்சியில் 364 மதக்கலவரங்களும் நடைபெற்றன. சமாஜ்வாதி ஆட்சியில் மின்சார விநியோகமும் சாதிமத அடிப்படையில் செய்யப்பட்டது. ரம்ஜான், பக்ரீத்திற்கு மட்டும் கிடைத்த மின்சாரம், ஹோலி, தீபாவளியில் கிடைக்கவில்லை. இதுபோல் இன்று பாஜக ஆட்சியில் அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்து வந்தது’ எனத் தெரிவித்தார்.

இந்த 57 தொகுதிகளில் 2017 தேர்தலில் பாஜகவிற்கு 46 இல் வெற்றி கிடைத்தன. இதில் பாஜகவின் கூட்டணியான அப்னா தளம் மற்றும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் கிடைத்திருந்தன. இந்த தேர்தலில் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகிலேஷ்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கூட்டணியில் இணைந்துள்ளது.

இந்த தேர்தல் கடைசி இரண்டு கட்டங்களில் என இருப்பினும், பிரதமர் நரேந்திரமோடியும், முதல்வர் யோகியும் தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தனர். கடைசி வாக்குப்பதிவான மார்ச் 7 வரையிலான தேர்தலுக்கும் இந்த இரண்டு முக்கியத் தலைவர்களின் பிரச்சாரம் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த 57 தொகுதிகளில் 11 தனித்தொகுதிகளாக அமைந்துள்ளன. இதனால், அந்த தொகுதிகளில் மட்டும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களுடன் சேர்த்து மும்முனைப்போடி நிகழ்கிறது. மற்ற தொகுதிகளில் பாஜகவிற்கும், சமாஜ்வாதிக்கும் இடையிலான முக்கியப் போட்டியாக அமைந்துள்ளது. இவற்றில் காங்கிரஸுடன் சேர்த்து ஆம் ஆத்மி கட்சியும் முக்கியப் போட்டியில் உள்ளது. இதன் சார்பில் உபியின் ஆறாம்கட்டத் தேர்தலில் முஸ்லீம் வாக்குகளை குறி வைத்துள்ளது. இதற்காக, டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோதியா, மாநிலங்களவை எம்.பி சஞ்சய்சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய டெல்லி தலைவர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.

x