செந்தில்பாலாஜியின் மனுக்களுக்கு அமலாக்க துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க வேண்டும் எனக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 மனுக்களுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவு ஜூன்19 அன்று (நேற்று) பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த உத்தரவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிமோசடி செய்ததாக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் ஜூன் 21 அன்று வரவுள்ளது. வங்கியின் அசல் ஆவணங்களை தரக்கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடர்பாகவும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.

எனவே அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கப்பட்ட வங்கிஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்தநீதிபதி எஸ்.அல்லி, இதுதொடர்பாக அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 25-க்கு தள்ளி வைத்துள்ளார். இதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் வரும் ஜூன் 25 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

x