சென்னை: நாடாளுமன்றத்துக்குள் சென்ற போது தன்னை தடுதது நிறுத்தி, கேள்வி எழுப்பிய மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திமுக மாநிலங்களவை எம்.பி. அப்துல்லா புகார் அனுப்பியுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம். நாடாளுமன்ற மக்களவையில் பொதுமக்கள் அமரும் மாடத்தில்இருந்த இருவர், திடீரெனஅவைக்குள் குதித்து, கையில் வைத்திருந்த பொருளில் இருந்துவண்ணப் புகையை வெளிவரச்செய்தனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அப்போது பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து. மே 20-ம் தேதிமுதல் பாதுகாப்பை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, திமுக மாநிலங்களவை எம்.பி. எம்.எம்.அப்துல்லா, நாடாளுமன்றத்துக்கு வழக்கம் போல் வந்தார். அப்போது அவரை சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ள, அப்துல்லா உடனடியாக சிஐஎஸ்எப் வீரர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். இகுதுறித்து அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஜூன் 18-ம் தேதி மதியம் 2.40 மணியளவில், நாடாளுமன்ற வளாகத்துக்குள் பேட்டரி வாகனத்தில் வந்தேன். அப்போது என்னை தடுத்து நிறுத்திய சிஐஎஸ்எப் வீரர்,நாடாளுமன்றத்துக்கு வந்ததன் காரணம் குறித்து கேள்வி எழுப்பினார். தமிழக மக்களின் பிரதிநிதியான என்னிடம் சிஐஎஸ்எப் வீரர், நாடாளுமன்றம் வந்ததற்கான காரணம் குறித்து கேட்டது எனக்குதிகைப்பாக இருந்தது. நாடாளுமன்ற பாதுகாப்பு சேவைப்பிரிவு பாதுகாப்பு பணியில் இருந்த போது, இதுபோன்ற தவறான நிகழ்வுகள் நடைபெற்றதில்லை.
அலுவல் ரீதியான பணிகள்இல்லாவிட்டாலும், நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்கள் வரலாம். அப்படியே பணிகள் இருந்தாலும், அது பற்றி மாநிலங்களவை தலைவரான தங்களுக்கு தான் பதில் அளிக்க வேண்டும். அப்படியிருக்கும் போது, சிஐஎஸ்எப் வீரர் கேள்வி எழுப்பியது ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் என்னை ஆழமாக பாதித்துவிட்டது. எனவே, சம்பந்தப்படட்வர் மீது தாங்கள் நடவடிக்கை எடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்களின் மாண்பை நிலை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி கடந்த மாதம்,திமுக எம்.பி. திருச்சி சிவாவும் இதுபோன்று நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது