உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவியேற்பு வரும் 4 ஆம் தேதி நடக்கிறது. மேயர், நகரசபைத் தலைவர், பேரூராட்சி தலைவர் என முக்கியப் பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்யும் படலத்தில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிவருகின்றன. அதேநேரத்தில் துணைத்தலைவர், துணை மேயர் உள்ளிட்ட இரண்டாம் நிலை பதவிகளுக்கு சமூகநீதியை அடிநாதமாகக் கொண்டு அரசியல் கட்சிகள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சுரேஷ் காமதேனுவிடம் கூறுகையில், ‘இந்தத் தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுமைக்கும் வார்டு மறுவரையறை செய்யப்பட்டிருந்தது. அதில் இஷ்டப்படி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுவிட்டது. உதாரணமாக பட்டியல் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வார்டுகள் பொதுவாக ஆக்கப்பட்டிருந்தது. அதேபோல் பொதுப்பிரிவினர் அதிகம் இருக்கும் பகுதிகள் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அவலமும் நடந்தது. ஒரு உதாரணமாக குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் 4000 வாக்குகள் ஒரு வார்டாகவும், சமவெளியில் வெறும் 400 வாக்குகள் ஒரு வார்டாகவும் உள்ளது. இது மிகச்சாதாரணமாக மீனவர்களின் வாக்கிற்கு இணையான பிரதிநிதித்துவத்தை உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேற்றிவிடும்.
இதுமட்டும் இல்லாமல் குமரி உள்பட பல மாவட்டங்களிலும் பட்டியல் இன வார்டுகள் மறுவரையறையில் பொது வார்டுகள் ஆகிவிட்டன. தமிழகத்திலேயே பட்டியல் இன மக்களுக்கு தனித்தொகுதிகள் இல்லாத ஒரே மாவட்டம் கன்னியாகுமரிதான். இங்கு அனைத்துத் சட்டப் பேரவைத் தொகுதிகளுமே பொதுவாகவே உள்ளது. இப்படியான சூழலில் உள்ளாட்சி அமைப்பின் துணைத்தலைவர் பதவிகளையேனும் பட்டியல் இன மக்களுக்கு வழங்குவதே உண்மையான சமூக நீதியாக இருக்கமுடியும். இதை அனைத்துக் கட்சிகளும் பின்பற்றுவதன் மூலம் சமூகநீதியில் தமிழகம் ஒருபடி முன்னகர்ந்து அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறும்’’ என்றார்.