பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் திறன் மேம்பாட்டுக்காக 'நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் திறன் மேம்பாட்டுக்காக திட்டம் சென்னையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "நான் முதல்வன் திட்டம் எனது கனவு திட்டம். இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வர வேண்டும். கல்வி ஆராய்ச்சி, சிந்தனை, செயல், திறமையில் மாணவர்களை சிறந்தவர்களாக மாற்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க நாள் என்பதால் எனது வாழ்வில் இன்று பொன்னாள்.
மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே 'நான் முதல்வன்' திட்டத்தின் நோக்கமாகும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது ஆனால் அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது. இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது, அதை நீக்கவே புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி பட்டத்தை தாண்டி தனித்திறமை இருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும். அகத்தடைகளை உடைத்து எறிய தொடங்கப்பட்ட திட்டம் தான் 'நான் முதல்வன் திட்டம்' என்று ஸ்டாலின் நம்பிக்கை கூறினார்.
நான் முதல்வன் திட்டம் மூலம் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும். படிப்பு என்பது பட்டம் சார்ந்ததாக மட்டும் அல்ல திறமை சார்ந்ததாக மாற வேண்டும். வேலை என்பது சம்பளம் சார்ந்ததாக இல்லாமல் திறன் சார்ந்ததாக மாற வேண்டும். பெற்ற தாய் போல் மாணவர்கள், இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
2026க்குள் தமிழ்நாட்டில் 20 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்பட வேண்டும். தமிழ் சமுதாயத்தின் அனைத்து இளைஞர்களையும் அரசு தகுதிசால் மனிதர்களாக மாற்ற நினைக்கிறது. நான் முதல்வன் திட்டம் தொடர்பாக விரைவில் தமிழ்நாடு அரசு அறிவிப்புகளை வெளியிடும்" என்று தெரிவித்தார்.