நீதிபதி சந்துரு அறிக்கை இந்துக்களுக்கு எதிரானது: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம்


சென்னை: இந்து மக்களுக்கு எதிராக நீதிபதி சந்துரு தலைமையிலான தனி நபர் குழு அறிக்கை இருக்கிறது எனவும், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மையக்குழு கூட்டம்சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலைதலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தின் நடுவில் செய்தியாளர்களிடம்தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘‘இந்த மையக்குழு கூட்டத்தில் நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்வதற்கான தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் நிர்வாக ரீதியாக சில குளறுபடிகள் நடந்திருக்கிறது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜகவில் இருந்து அனைவரும் பிரச்சாரத்துக்காக செல்வோம். அதற்கான பட்டியல் மையக்குழுவில் தயாராகி வருகிறது. கூட்டணி கட்சிவேட்பாளாருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்’’ என்றார்.

இதையடுத்து, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாவது: ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான தனி நபர்குழு அறிக்கை முதல்வருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை சர்ச்சைக்குரிய வகையிலும், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக காழ்ப்புணர்வு நடவடிக்கை எடுப்பது போலவும் பரிந்துரைகள் இருக்கின்றன. இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று பேசுபவர்கள், இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்க கூடாது, கோயில் கயிறு கைகளில் கட்டக்கூடாது என்பதெல்லாம் சரியான பரிந்துரை அல்ல. மேலும், பள்ளிகள் இருக்கும் பகுதியை சுற்றியுள்ள பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கக்கூடாது என்பதெல்லாம் என்ன மாதிரியான செயல்முறை.

பெரும்பான்மை சமுதாயத்தை குறிவைக்கும் வகையில் நீதிபதி சந்துரு அறிக்கை இருக்கிறது. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, இந்து மக்களை குறிவைத்து இது போன்று பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பரிந்துரைகளை மாநில அரசு கண்டிப்பாக ஏற்க கூடாது. இதுதொடர்பாக மையக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

x