இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து


சென்னை: சென்னை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் மருத்துவர்கள் 13 பேர் தங்களது விருப்பம் மற்றும் முன்னுரிமைகளை கருத்தில் கொள்ளாமல் இடமாறுதல் செய்துமத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக்கூறி மத்திய அரசு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினரான நீதிபதி எம்.சுவாமிநாதன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி, கடந்த2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பணியிட மாறுதல் கொள்கை நடைமுறைகளைப் பின்பற்றாமல், மனுதாரர்கள் 13 பேருக்கும் இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனர்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய அரசி்ன் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘புதிய பணியிட மாறுதல் கொள்கை நடைமுறைகளைப் பின்பற்றி, சட்டப்படி நியாயமான முறையில் தான் இந்த பணியிட மாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அதையடுத்து தீர்ப்பாயம், ‘‘இந்த பணியிட மாறுதல் தொடர்பான உத்தரவு முன்னுரிமை மற்றும் குறைதீர் குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமலும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக்கூறி 13 இணைப் பேராசிரியர்களின் இடமாறுதல் உத்தரவையும் ரத்து செய்தது.

மேலும், புதிய பணியிட மாறுதல் கொள்கையைப் பின்பற்றி ஒரு மாதத்தில் இடமாறுதல் உத்தரவுகளை மேற்கொள்ளலாம் என்றும், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

x