கோகுல இந்திரா உள்பட 2,500 பேர் மீது வழக்குப்பதிவு


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் கோகுல இந்திரா அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட 2,500 அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக பிரமுகர் நரேஷை தாக்கியதாக அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது சாலைமறியல், 5 கோடி சொத்து அபகரிப்பு என மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர். ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சி தலைமையகம் அறிவித்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதனையும் மீறி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மாவட்ட செயலாளர்கள் வி.என்.ரவி, ஆதிராஜாராம், பாலகங்கா உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுக அரசு மற்றும் போலீஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், ஆளும் அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக மாவட்ட செயலாளர்கள் வி.என்.ரவி, ஆதிராஜாராம், பாலகங்கா, சத்யா உள்ளிட்ட 2,500 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு இடையூறு செய்தல், சட்டவிரோதமாக தடுத்தல், அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தல், அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

x