நேருவின் நட்பு வட்டம்... இன்று! - 6


வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார்

1979-ல் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் படிக்கும்போது, அக்கல்லூரியின் மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எட்வின் ஜெயக்குமார். அப்போது திருச்சி அனைத்துக் கல்லூரிகளின் மாணவர் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்ஜிஆரின் ஆட்சி நடந்துகொண்டிருந்த அந்த காலகட்டத்தில், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது. ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்.

அப்போது ஆசிரியர்களுக்கு ஆதரவாக திருச்சியில் மாணவர்கள் கிளர்ந்தெழுந்து போராடினர். அப்போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவரான எட்வின் ஜெயக்குமாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தவரை, திருச்சி மரக்கடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி சால்வை அணிவித்துப் பாராட்டினார். அப்படி எம்ஜிஆர் காலத்திலேயே, தனது மாணவப் பருவத்திலேயே திமுகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்த, திருச்சியின் பிரபல வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார், தற்போது அதிமுகவில் இருக்கிறார் என்பதுதான் காலத்தின் விளைவாக ஏற்பட்ட முரண். அதற்கு என்ன காரணம்? எட்வின் ஜெயக்குமாரின் பின்னனி என்ன என்பதைப் பார்க்கலாம்.

சிறை மீண்ட சமயத்தில்...

அன்பிலுக்கு பக்கத்தில் இருக்கும் லால்குடி மணக்கால் தான் எட்வின் ஜெயக்குமாரின் ஊர். அவரது தந்தை ராமூர்த்தி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நில அளவையராக அரசு உத்தியோகம். கருணாநிதி அரசு ஊழியர்களின் ஊதியத்தை முறைப்படுத்தியவர் என்பதால், ராமூர்த்திக்கு கருணாநிதி மீதும், திமுக மீதும் தானாக ஈடுபாடு அதிகமானது. அதுமட்டுமில்லாமல், பக்கத்தில் உள்ள அன்பில் தர்மலிங்கமும் திமுகவின் மீதான ஈர்ப்புக்கு காரணம். அன்பிலாரின் மனைவியும், எட்வின் ஜெயக்குமாரின் பெரிய தாயார் தர்மாம்பாளும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அதனால், குடும்ப ரீதியாக அன்பிலாரின் குடும்பத்துடன் எட்வின் ஜெயக்குமாரின் குடும்பம் மிக நெருக்கமாக இருந்தது.

ராமூர்த்தியின் வீடிருக்கும் மணக்கால் வழியாகத்தான் தினமும் காலையில் அன்பிலார் வயலுக்குச் செல்வார். அவர் திரும்பி திருச்சி செல்லும்போது, அவரது காரில் மகன் பொய்யாமொழியை பள்ளிக்கு அழைத்துச் செல்வார். அப்போது, எட்வின் ஜெயக்குமாரையும் தனது காரில் ஏற்றிச்சென்று திருச்சி சிந்தாமணியில் உள்ள இ.ஆர். உயர்நிலைப் பள்ளியில் இறக்கி விட்டுவிட்டுப் போவார் அன்பிலார்.

அந்தப் பள்ளியில் பொய்யாமொழி 11-ம் வகுப்பும், எட்வின் ஜெயக்குமார் 9-ம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். திருச்சி, ஆண்டாள் தெருவில் உள்ள அன்பிலாரின் சகோதரி தனபாக்கியம் வீட்டில்தான் இருவருக்கும் தினமும் மதிய உணவு. அந்த அளவுக்கு அன்பிலாரின் குடும்பத்துடன் இருந்த நெருக்கம், தனது தந்தை காட்டிய ஈடுபாடு ஆகியவற்றால் எட்வின் ஜெயக்குமாருக்கும் இயல்பாகவே திமுகமீது ஈடுபாடு வந்தது. அதனால், திமுக சார்ந்த செயல்பாடுகளில் சிறுவயது முதலே ஆர்வமாக ஈடுபட்டு வந்தார்.

அமைச்சர் கே.என்.நேரு அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அப்பகுதியில் தீவிர திமுககாரராக எட்வின் விளங்கினார். 1980-ல், லால்குடி ஒன்றிய மாணவரணி அமைப்பாளராக பொறுப்பு தேடிவந்தது. அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திருச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக என். செல்வராஜ் போட்டியிட்டார். அப்போது, லால்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு எட்வின் ஜெயக்குமாரும் ஒரு தேர்தல் பொறுப்பாளர். அந்தத் தேர்தலில், சற்றேறக்குறைய 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் செல்வராஜ் வென்றார். அதில், லால்குடி தொகுதியில் மட்டுமே 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் கிடைத்திருந்தன. இந்த வெற்றியைப் பாராட்டி, லால்குடி ஒன்றியச் செயலாளர் கங்காதரன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் எட்வின் ஜெயக்குமார் ஆகியோரை கருணாநிதி சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

எட்வின் ஜெயக்குமார்

மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியால், உடனடியாக எம்ஜிஆர் அரசை கலைத்தார்கள். அதனால், 1980-ல் சட்டப்பேரவைத் தேர்தலும் கூடவே வந்தது. அன்பில் தர்மலிங்கம், லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு தலைமை தேர்தல் முகவர்களாக காட்டூர் மகாலிங்கமும், எட்வின் ஜெயக்குமாரும் தான் அப்போது பணியாற்றினார்கள்.

1989-91-ல், திருச்சி சட்டக்கல்லூரியில் படிக்கும்போது அங்கு மாணவர் திமுகவை உருவாக்கி, அதன் தலைவராக இருந்தார் எட்வின். அந்தக் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவரும் அவர்தான். அங்கு அன்பிலாரை அழைத்து வந்து, முதன் முதலாக திமுக கொடியை ஏற்றினார். படித்து முடித்து வழக்கறிஞர் ஆனதுமே, 1992-ல் திருச்சி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் பதவி எட்வினை தேடிவந்தது. அதன்பிறகு, திமுகவினர் சம்பந்தப்பட்ட வழக்குகளை திறம்பட நடத்திக் கொடுத்தார். “ரொம்பக் கரெக்டானவருப்பா” என்று கட்சிக்காரர்கள் இவரை மதித்தனர்; செல்வாக்கும் பெருகியது. நேரு, செல்வராஜ், மலர்மன்னன், பொய்யாமொழி என்று அனைவருக்கும் இணக்கமானவராகவும், இணையானவராகவும் எட்வின் ஜெயக்குமாரும் இருந்தார்.

1996 முதல் 2001 வரை அமைச்சராக இருந்த நேரு மீது, ஜெயலலிதா அரசு சொத்துக்குவிப்பு வழக்குப் போட்டது. அந்த வழக்கை 2001 - 2006 காலகட்டத்தில் எட்வின் ஜெயக்குமார்தான் நடத்தினார். நேரு வீட்டில் ரெய்டு நடக்கும்போதும் அங்கே எட்வின் தான் நேருவின் கூடவே இருந்து போலீஸாரை சமாளித்தார். அதன் மூலம் நேருவின் சகோதரர் ராமஜெயத்துக்கும் நெருக்கமான நண்பரானார் எட்வின். புலவர் செங்குட்டுவன் வீட்டில் ரெய்டு நடக்கும்போதும் இவர் புலவருக்கு துணை நின்றார். திமுகவின் மற்ற வழக்கறிஞர்களை, “யோவ் வக்கீலு” என்று தனக்குரிய பாணியில் ஜாலியாக அழைக்கும் நேரு, “வாங்க ஜெயக்குமார்” என்றுதான் இவரைக் கூப்பிடுவார். நெருக்கத்தையும் தாண்டிய ஒரு மதிப்புதான் அதற்குக் காரணம்.

நேருவின் மனைவியை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க நடத்திய சட்டப்போராட்டம், ராமஜெயம் மீதான வழக்குகளில் காட்டிய அசாத்திய திறமை உள்ளிட்டவற்றால், நேருவுக்கு மேலும் நெருக்கமானார் எட்வின். அதுவே, மு.க.அழகிரி வழக்கை நடத்துவதற்கும் அடிப்படை காரணமானது. அதன் மூலம் பின்னாளில் அழகிரியுடனும் நெருக்கமானார் எட்வின்.

கருணாநிதியுடன் எட்வின் ஜெயக்குமார்...

2003-ல் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதான மு.க.அழகிரி, மதுரையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அப்போது, “அவரோட நேரடியா டீல் பண்றது கொஞ்சம் சவாலான வேலையப்பா... நீ போய் கிட்ட இருந்து எல்லாத்தையும் பார்த்துக்க” என்று எட்வின் ஜெயக்குமாரைதான் அனுப்பி வைத்தார் நேரு. அதிலிருந்து, அழகிரி விடுதலையான நாள் வரைக்கும் அழகிரிக்கு தேவையான அனைத்தையும் எட்வின்தான் பார்த்துக் கொண்டார். அழகிரியை பார்க்கவந்த தயாளு அம்மாள், கனிமொழி, டி.ஆர். பாலு. ஆர்.எஸ்.பாரதி, காந்தி அழகிரி, துரை தயாநிதி அனைவருமே அந்த சந்தர்ப்பத்தில் எட்வினுக்கு நெருக்கமானார்கள்.

இப்படி எல்லாம் அதிகார மையத்துடன் நெருக்கமாக இருந்தவர், ஏன் அதிமுகவுக்குப் போனார்... அதற்கான சூழல் ஏன் ஏற்பட்டது? என்பதை அடுத்தவாரம் பார்க்கலாம்.

x