ஒருங்கிணைந்து பணியாற்றினால் யானைகள் வேட்டையை தடுக்க முடியும்


தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே காட்டு யானைகள் வேட்டையை தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காட்டு யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றம், இக்குழுவில் கேரள அதிகாரிகளை சேர்ப்பது குறித்து அம்மாநில அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கேரள வனத்துறை சார்பில் ஆஜராகியிருந்த அம்மாநில அரசு வழக்கறிஞர், மலையாட்டூரில் 18 காட்டு யானைகள் கொல்லப்பட்டது குறித்த வழக்கை விசாரித்த, பெரியாறு புலிகள் சரணாலய அதிகாரி மனுசத்தியனை நியமிக்க இருப்பதாக தெரிவித்தார்.

இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் யானைகள் வேட்டையை தடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

மேலும், கேரளாவில் விலங்குகள் வேட்டை தொடர்பான முக்கிய வழக்குகளை, மாநில அரசின் ஒப்புதலைப் பெற்று சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உட்படுத்தலாம் என தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

x