சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் கைதான சாத்தான்குளம் காவலருக்கு தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 2 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், காவலர் சாமதுரை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்நிலையில் காவலர் சாமதுரையின் தாயார் மருதகனி தூத்துக்குடி மாவட்டம் திருக்களூர் சொக்கனூரில் உடல் நலக்குறைவால் இன்று இறந்தார்.
இதனால் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் கேட்டு சாமதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறையில் இருந்து வருகிறேன். என் தாயார் இன்று இறந்ததுவிட்டார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.வெங்கடேசன் ஆஜரானார். பின்னர், மனுதாரருக்கு தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று மாலை 5 மணியிலிருந்து மார்ச் 2 மாலை 5 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. இடைக்கால ஜாமீன் நாட்களில் மனுதாரருக்கு அவரது சொந்த செலவில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.