தில்லுமுல்லு செய்து திமுக வெற்றி: தங்கமணி குற்றச்சாட்டு


"நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுகவினர், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்" என்று முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி கூறினார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ போராட்டத்திற்கு தலைமை வகித்துப்பேசுகையில், "தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையான வெற்றி அல்ல செயற்கையான வெற்றி. உள்ளாட்சித்தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் மாநில தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் ஆளும் திமுக அரசு அதிகாரிகளை மிரட்டி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து செயற்கையான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

உண்மையாக தேர்தல் நடந்திருந்தால், நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதைக் காட்டு விவிபேட் இயந்திரத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். கள்ள ஓட்டுப்போடுவதற்காக அவர்கள் அதை பயன்படுத்தவில்லை. மாலை 5 மணி முதல் 6 மணிவரை கரோனா நோயாளிகள் ஓட்டுப்போடுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் அந்த நேரத்தில், திமுகவினர் கள்ள ஓட்டுகளைப் போட்டு செயற்கையான வெற்றியைப் பெற்றுள்ளனர். சென்னையில் கள்ள ஓட்டுப்போட முயன்றவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தற்போது அவர் வெளியே வரக்கூடாது என்பதற்காக மேலும் பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

எத்தனை பேரை கைது செய்தாலும், அதிமுகவினர் யாரும் பயப்படமாட்டார்கள். கடந்த 1996ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. ஆனால் 2 ஆண்டு கழித்து 1998ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியாக வெற்றிபெற்றது. அதே நிலைதான் தற்போதும் உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்" என்று கூறினார்.

x