பதவியை இழந்தார் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழுத் தலைவர்


ஒன்றியக்குழு உறுப்பினர்கள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், இன்றைய தினத்தில் தன் பதவியை இழந்திருக்கிறார் ஒன்றியக்குழு தலைவர் ஒருவர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் 20 உறுப்பினர்களைக் கொண்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இங்கு திமுக கூட்டணி சார்பில் எட்டு உறுப்பினர்களும், அதிமுக கூட்டணியில் 12 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிக உறுப்பினர்கள் இருந்த போதிலும் அதிமுகவால் ஒன்றியக் குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அந்த ஒன்றியக் குழு தலைவர் பதவி இடம் பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது தான் அதற்கு காரணம். அதிமுகவில் ஒருவர் கூட பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் இல்லை. ஆனால் திமுகவில் 5 பெண் உறுப்பினர்கள் இருந்தனர்.

ஒன்றிய குழு கூட்டம்

இதனால் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரமதி என்பவரை அதிமுகவினர் தங்கள் கட்சிக்கு இழுத்து அவரையே ஒன்றியக்குழு தலைவராக்கினார்கள். இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி அமைந்ததும் அதிமுகவில் இருந்து 6 உறுப்பினர்கள் திமுகவுக்கு தாவினர். இதனால் திமுகவின் பலம் பெரும்பான்மைக்கு தேவையான அளவு அதிகரித்தது. இதைத்தொடர்ந்து தங்கள் கட்சியில் இருந்து அதிமுகவுக்கு தாவி, தலைவராக இருக்கும் சந்திரமதிக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்தனர்.

அதையடுத்து இன்று (பிப். 28) குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் சந்திரமதி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறியது. இதனால் தலைவர் பதவியிலிருந்து சந்திரமதி நீக்கப்படுவார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக பதவியேற்க உள்ள சூழ்நிலையில், தான் மட்டும் பதவி இழந்து வெளியேறும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறார் சந்திரமதி.

x