பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து


பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பாஸ்டேக் கட்டணம் செலுத்த முடியாததால் தடுத்து நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து.

வேலூர்: அரசுப் பேருந்தின் பாஸ்டேக் கணக்கில் இருப்புத்தொகை இல்லாததால் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் அரை மணி நேரத்துக்கு மேலாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

வேலூரில் இருந்து திருப்பத்தூருக்குச் சென்ற அரசுப் பேருந்து இன்று (ஜூன் 19) மாலை பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை கடந்து செல்ல முயன்றது. அப்போது, பேருந்துக்கான பாஸ்டேக் கணக்கை சுங்கச்சாவடி ஊழியர்களால் ஸ்கேன் செய்ய முடியவில்லை. பலமுறை முயன்றும் பாஸ்டேக் கணக்கை ஸ்கேன் செய்ய முடியாததால் பேருந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து, பேருந்தின் நடத்துநர் உடனடியாக அதிகாரிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

பின்னர், அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பாஸ்டேக் கணக்கில் போதிய அளவுக்கு பணம் இருப்பு இல்லததால் ஸ்கேன் ஆகாமல் இருப்பது தெரியவந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அரசு பேருந்து சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டதால் சுங்கச்சாவடியில் நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது. அத்துடன், பேருந்தில் இருந்த பயணிகள் குறித்த நேரத்தில் ஊருக்கு செல்ல முடியாததால் சிரமப்பட்டனர். பயணிகள் சிலர் பேருந்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனர்.

பின்னர், பேருந்துக்கான சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக நடத்துநர் செலுத்தினார். அதன்பிறகே அந்த பேருந்து சுங்கச்சாவடியை கடந்து சென்றது. பாஸ்டேக் கணக்கில் போதிய அளவுக்கு பணம் இருப்பு இல்லாததால் அரை மணி நேரத்துக்கும் மேலாக அரசுப் பேருந்து நிறுத்தப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.