பிறந்தநாளை முன்னிட்டு கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை(மார்ச் 1) முன்னிட்டு நாளை(பிப்.28) சென்னையில் நடக்கும் விழாவில், இவர் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்கிற தன் வரலாற்றுப் புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிடுகிறார். இந்த விழாவுக்கு கட்சியினர் அனைவரையும் அழைக்க முடியாது போனது, பிறந்தநாள் பரிசாக கட்சியினரிடம் எதிர்பார்ப்பது, தான் வழங்கவிருக்கும் பரிசு, பிறந்த நாளன்று கட்சியினரை சந்திக்க இருப்பது, அனைத்து இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்பதன் தேவை என பல்வேறு அம்சங்களை விளக்கி கட்சினருக்கு மு.க.ஸ்டாலின் மடல் தீட்டியுள்ளார்.

அந்த மடலில் அவர் விரிவாக தெரிவித்திருப்பது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் எனக்கு அதிகமாக இருந்தது. அறிவாலயத்தில் அவர்களின் ஒளிமுகம் கண்டு அக மகிழ்ந்தேன். முதலமைச்சர் என்ற முறையில் பணிகள் நிறைந்திருந்த நிலையில், ஓய்வையும் உறக்கத்தையும் சற்று உதறித் தள்ளிவைத்துவிட்டு, கழகத்தினரைக் காணும் பேராவலில், ஒவ்வொரு நாளும், 6 மணி நேரத்திற்கும் அதிகமாக நின்றபடியே அவர்களின் அன்பினை நிறைவுடன் ஏற்றுக் கொண்டேன்.

இந்த வெற்றி மாபெரும் வெற்றி; கழகத்தின் தொடர்ச்சியான வெற்றி. 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதனுடன் இணைந்து நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி, 2020-ல் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, 2021-ல் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை உருவாக்கிய வெற்றி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, 2022-ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி என 6 தேர்தல் களங்களில் அடுத்தடுத்து வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் ‘சிக்ஸர்’ அடிப்பது போன்ற வெற்றி இது; மக்கள் தந்த வெற்றி; இந்த வெற்றியின் அருமை பெருமை முழுவதும் மக்களையே சேரும்.

நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் சிறந்த அடையாளமான இந்த வெற்றி என்பது, மக்களுக்கு நாம் நிறைவேற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்களால்தான் முழுமை பெறும். வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2-ஆம் நாள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலையில், மார்ச் 4 அன்று மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தப் பொறுப்புகளுக்குக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுபவர்களை முழுமையான அளவில் வெற்றி பெறச் செய்யவேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது உங்களில் ஒருவனான எனக்கு, தமிழ்நாட்டு மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசு. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர்- துணைத் தலைவர் தேர்தலில் கட்டுக்கோப்புடன், ஒருமனதுடன் செயல்படுவதுதான் கழகத்தினரிடம் நான் எதிர்பார்க்கும் பரிசு.

என்னுடைய பிறந்தநாளில் நான் உங்களுக்கு வழங்கும் அன்புப் பரிசாக - நன்றிப் பரிசாக ‘உங்களில் ஒருவன்’ என்கிற தன் வரலாற்றுப் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடுகிறேன். இயக்கத்தைக் காக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்த தலைவனாகவும், மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற முதலமைச்சராகவும், 68 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என் வாழ்க்கைப் பயணம்.

பதவிகளை மட்டுமல்ல, சிறைகளையும் சந்தித்தவன்; சித்திரவதைகளை அனுபவித்தவன்; போராட்டக் களங்களைக் கண்டவன். ஏச்சுகள், ஏளனங்கள், அவமதிப்புகள், புறக்கணிப்புகள் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு, இளைஞரணியை வளர்த்தெடுத்து, வெற்றியிலும் தோல்வியிலும் மக்களுக்கான பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பவன். எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு; வேறேதும் இல்லை.அதுதான், முத்தமிழறிஞர் கலைஞரிடம் நான் பெற்ற நற்சான்றிதழ். அந்த நற்சான்றிதழுக்குத் தமிழ்நாட்டு மக்கள் ஒப்புதலுடன் சூட்டிய வெற்றி மகுடம்தான் இந்த முதலமைச்சர் பொறுப்பு.

உங்களில் ஒருவனான என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில், நான் பிறந்த 1953-ஆம் ஆண்டு முதல், நெருக்கடி நிலைக்காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 1976-ஆம் ஆண்டு வரையிலான முதல் 23 ஆண்டுகால வாழ்க்கையை ‘உங்களில் ஒருவன்’ என்ற மனதுக்கு நெருக்கமான தலைப்பிலேயே புத்தகமாகப் பதிவு செய்திருக்கிறேன். என் சிறு வயது எண்ணங்கள், பள்ளிக்கால நினைவுகள், தலைவர் கலைஞரின் அன்பில் திளைத்த தருணங்கள், அரைக்கால் சட்டைப் பருவத்தில் இருவண்ணக் கொடியேந்தி இயக்கத்திற்காக இயங்கத் தொடங்கிய ஏற்றமிகு பொழுதுகள் உள்ளிட்ட அனுபவங்களை இதில் பதிவு செய்திருக்கிறேன்.

நாளை (பிப்.28) நடைபெறவுள்ள அதன் வெளியீட்டு விழாவில் இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அவர்கள் நூலினை வெளியிடுகிறார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சத்தியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். நூலாசிரியர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் ஏற்புரை வழங்குகிறேன்.

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு 1500-க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பங்கேற்கும் தலைவர்களின் பாதுகாப்புச் சூழல் காரணமாக, கழக உடன்பிறப்புகள் அனைவரையும் நேரடியாக அழைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருக்கிறது.

எங்களில் ஒருவன் வெளியிடும் உங்களில் ஒருவன் புத்தகத்திற்கு நாங்கள் வர இயலாதா எனக் கேட்கும் அன்பு உடன்பிறப்புகளுக்காக, நேரலை வாயிலாக அந்த விழா நிகழ்வுகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அவரவர் இடத்திலிருந்தும், ஆங்காங்கு உள்ள கழக அலுவலகங்களில் கூடியும் இந்த நிகழ்வைக் கண்டு களித்திட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மார்ச் 1 அன்று என்னுடைய பிறந்தநாள்; என்னை ஈன்ற அன்னை தயாளு அம்மையார் அவர்களிடம் வாழ்த்து பெற்று, குடும்பத்தினரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, கழக உடன்பிறப்புகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெறவிருக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேவை இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு இருக்கும் எனக் கழகத்தைத் தொடங்கியபோது பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்னார்கள். இன்றைய நிலையில், முன்பைவிடவும் தேவை அதிகமாகி இருக்கிறது. சமூகநீதிப் பயணத்தில் தமிழ்நாட்டைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு (All India Federation for Social Justice). நம் பயணம் நீண்டது, நெடியது; அது முடிவதில்லை.

உங்களில் ஒருவனான என்னுடைய பிறந்தநாளையொட்டி, நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்பது என் அன்புக் கட்டளை. மக்களுக்கு உரிய பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்காலத் தலைமுறைக்கு நம் இலட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் கழகத்தில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள்.

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என முத்தமிழறிஞர் நமக்குத் தந்துள்ள பொன்மொழியை நினைவில் கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட, மேலும் மேலும் உழைப்பேன்.. ஓயாது உழைப்பேன்.. உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் உற்சாகமாக உழைப்பேன் எனப் பிறந்தநாள் உறுதியினை ஏற்கிறேன்!

இவ்வாறு தனது மடலில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

x