வைகை ஆற்றில் தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் துளைகள்


வைகை ஆறு வற்றாத ஜீவநதி அல்ல. இந்த ஆற்றில் தொடர்ந்து 3 அல்லது 4 மாதங்கள் தண்ணீர் ஓடினாலே அதிசயம். இதனால் கோடைக்காலங்களில் ஆற்றையொட்டிய பகுதிகளில் கூட நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிடுகிறது. மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை சுமார் 15 லட்சத்தைத் தாண்டிய நிலையில் மக்களின் தண்ணீர் தேவை அதிகரித்து, கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, ஆரப்பாளையம் அருகே புதிய தடுப்பணை கட்ட உத்தரவிட்டது. இது முந்தைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலத்தில் (செப்டம்பர், 2020) அடிக்கல் நாட்டப்பட்ட திட்டமாகும்.

இதன் தொடக்க நிகழ்வில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு, ரூ.11.985 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்வழி துளைகள் மற்றும் தடுப்பணை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் .கோ.தளபதி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) கண்காணிப்புப் பொறியாளர் சுகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

"இந்த புதிய தடுப்பணையானது ஆரப்பாளையத்தில் 320மீ நீளத்தில் ரூ.11.985 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இத்திட்டத்தில் தடுப்பணையின் மேல்புறம் தண்ணீர் நிற்கும் பரப்பில் மூன்று நிலத்தடி செறிவூட்டு துளைகள் அமைத்து நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தவும் மற்றும் நீரின் உவர்ப்பு தன்மையை மாற்றவும் முடியும். இத்திட்டமானது மதுரை மாநகருக்கு ஒரு முன்மாதிரி திட்டமாகும். தடுப்பணையின் மூலம் 1.36 மி.க.அடி தண்ணீர் தேக்க முடியும். மேலும், 2கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து சுமார் 1.25 இலட்சம் மக்கள் பயனடைய வாய்ப்புள்ளது. இத்திட்டத்தில் வெள்ளதடுப்புச்சுவர் 105மீ நீளத்திற்கு கட்டும் பணியும், ஆற்றின் படுகையை 240மீ நீளத்திற்கு சீரமைக்கும் பணியும் அடங்கும்" என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே இந்த இடத்தில் ஒரு தடுப்பணை இருந்தது. அங்கிருந்து நேரடியாகத் தண்ணீர் எடுக்கப்பட்டு மதுரை நகர் குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்தப்பட்டதால், அதனை அசுத்தம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து வருவதும் உண்டு. அதேபோல இந்த அணையை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

x