வெளிநாட்டில் படித்து அரசியலுக்கு வந்தவரும், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகனுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் டீசண்ட் அரசியல் மட்டுமே செய்துவந்தார். மதுரையின் அரசியல் கலாச்சாரத்துடன் ஒன்றுவதில் அவருக்குக்கு நிறையவே தயக்கங்கள் இருந்தன. 2016ல் சட்டமன்ற உறுப்பினரான அவர், 2021 வரையில் கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டையே கடைபிடித்துவந்தார். இரண்டாவது முறையாக வெற்றிபெற்று, அமைச்சரானபோது லோக்கல் அரசியலையும் பக்காவாகக் கற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம், அவர்களுக்கான பத்திரிகை விளம்பரம் எல்லாவற்றையும் தானே முன்னின்று நடத்தினார் பழனிவேல் தியாகராஜன்.
இந்நிலையில் இன்று அவரது தந்தை பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் பிறந்த நாள் வந்தது. ஜெயலலிதா பிறந்த நாளன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று அதிமுக அமைச்சர்கள் அறிவிப்பதைப் போலவே, பி.டி.ஆர். பிறந்த நாளன்று திடீர்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பார் என்று அந்தப் பகுதி திமுக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான மிசா பாண்டியன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியராகராஜன் மருத்துவமனைக்குச் சென்று இன்று பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து மதுரை மேலவாசலில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் கல்லூரி மாணவியின் கல்லூரி கட்டணம் மற்றும் புத்தக செலவுக்காக ரூ.15 ஆயிரம் நிதி உதவியை அமைச்சர் நேரில் வழங்கினார். பின்னர் எல்லீஸ்நகர் 60வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் அமைச்சர்.
முன்னதாக பாளையம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்த அவர், பின்னர் பாண்டியன் ஓட்டல் அருகே உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, பொன்.முத்துராமலிங்கம் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக 50வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நகர்ப்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்துக்குச் சென்ற அமைச்சர் அங்கிருக்கும் முதியோருக்கு உணவு வழங்கினார். பிறகு என்.எம்.ஆர்.சுப்புராம் பள்ளியில் தங்கிப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தரமான மதிய உணவை தன் மனைவி, இரு மகன்களுடன் சென்று பரிமாறினார் அமைச்சர். அதேபோல விஸ்வநாதபுரம் முதியோர் இல்லத்திலும் அமைச்சர் பிடிஆர் அன்னதானம் வழங்கினார். இன்று காலை முதல் மாலை வரையில் தனது தந்தை பிறந்த நாள் விழாவை, மிகப்பெரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக அமைச்சர் நடத்தியது ஏழைகளைக் கவர்ந்தது.
இதுநாள் வரையில் மதுரையில் மு.க.அழகிரி பிறந்த நாளுக்குத்தான் இவ்வளவு விரிவான ஏற்பாடுகளை திமுகவினர் செய்வது வழக்கம். மதுரையின் அரசியல் முகம் மாறுவதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கல்யாண மண்டபம் பிடித்து பாத்திர பண்டங்களை வழங்க ஆரம்பித்துவிட்டால் அழகிரியையே மிஞ்சிவிடலாம் என்கிறார்கள் திமுகவினர்.