புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தங்களின் தோல்விக்கு நகர செயலாளர் ஆனந்த் தான் காரணம் எனக்கூறி திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற இரண்டு வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அறந்தாங்கி நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 27 வார்டுகளில் 17 வார்டுகளை திமுக கைப்பற்றி நகர்மன்றத்தை தங்கள் வசமாக்கி உள்ளது. ஆனால் திமுக சார்பில் 13 மற்றும் 17 வது வார்டுகளில் போட்டியிட்ட மஞ்சு திருவள்ளுவசெல்வன், சுசிலா சுப்ரமணியன் ஆகிய இருவரும் தோல்வி அடைந்தனர். அந்த வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது.
தங்களின் தோல்விக்கு திமுக நகர செயலாளர் ஆனந்த் சரிவர செயல்படாதுதான் காரணம். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற அவரும் அவரது ஆதரவாளர்களும் உறுதுணையாக இருந்தனர். எனவே அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குற்றஞ்சாட்டி அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் உள்ள கலைஞர் படிப்பகத்தில், தேர்தலில் தோல்வியுற்ற இரண்டு வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் ஒன்றிய மற்றும் மாவட்ட திமுக சார்பில் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.