மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் சிதம்பரம் நடராஜர் கோயில்


நடராஜர் கோயில்

கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த சிதம்பரம் நடராஜர்கோயில் சமீபநாட்களாக தினமும் செய்திகளில் அடிபடத் தொடங்கியிருக்கிறது. கோயிலுக்கு வழிபடச்சென்ற பெண் ஒருவரை தீட்சிதர்கள் தாக்கியதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டாலும், கனகசபையில் பக்தர்களை அனுமதிக்க மறுப்பதாலும் தொடர்ந்து சிதம்பரம் நகரம் ஒருவித பரபரப்புடனேயே இருந்துவருகிறது.

இ.கம் போராட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலுக்கு வந்த பெண் ஒருவர் நடராஜர் சன்னதி இருக்கும் கனகசபையில் ஏற முயற்சித்தார். அப்போது அங்குள்ள தீட்சிதர்கள் பலரும் அப்பெண்ணை வழிமறித்து, சாதிப்பெயரை கூறி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்து இரண்டு வார காலத்திற்கு மேல் ஆகியும் இன்றுவரை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை. உடனடியாக கைது செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்திவருகின்றன.

இந்த நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சம்பந்தப்பட்ட தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும், நடராஜர் கோவிலை தனிச்சட்டம் இயற்றி இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் கோரி கோயிலை முற்றுகையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் கோவில் கனகசபையில் அனைவரும் எந்த பாகுபாடும் இல்லாமல் இலவசமாக தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர். அவர்களை போலிஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

நடராஜர் சன்னதி

சிதம்பரம் நடராஜர் கோவில் நடராஜர் சன்னதி இருக்கும் கனகசபை மேல் ஏறிச்சென்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க அரசு தரப்பிலும் முயற்சிகள் தொடங்கப் பட்டுள்ளன. சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

’கனகசபையின் மேலே சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என்றும், நடராஜர் சந்நிதியில் தேவாரம், திருவாசகம் பாடவும் அனுமதிக்க முடியாது’ என்றும் அப்போது தீட்சிதர்கள் தரப்பில் உறுதிபட தெரிவிக்கப் பட்டுவிட்டது. இதனால் பக்தர்களும், தமிழார்வலர்களும் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். இதனை கடுமையாக கண்டிக்கும் அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தவும் தயாராகிவருகின்றனர்.

கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு ஓதுவார் ஆறுமுகசாமியை நடராஜர் சன்னதியில் தேவாரம் பாட அனுமதிக்காததால்தான் கோயில் நிர்வாகம் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாக கோயிலையும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு கொண்டுவந்தது. அதன்பின்னர் நீதிமன்றம் சென்று கோயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வந்தனர் தீட்சிதர்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் கனகசபை மீது ஏறவும், தேவாரம், திருவாசகம் பாடவும் அவர்கள் தடை விதித்திருப்பது சிதம்பரத்தை மீண்டும் போராட்டகளமாக்க காரணமாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கவலைப் படுகிறார்கள்.

அதற்கேற்றாற்போல தெய்வத்தமிழ்ப் பேரவை என்ற அமைப்பின் சார்பில் நாளை 28 ம் தேதி முதல் மார்ச் 05ம் தேதிவரை ஆறுநாட்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அணிவகுத்துச் சென்று திருச்சிற்றம்பலத்தில் சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சியும், மக்களிடம் இதுகுறித்த பரப்புரையும் தினமும் நடைப்பெற்று வருகிறது. இதனால் வரும் நாட்களில் சிதம்பரம் நகரம் மிகுந்த பரபரப்புடனேயேதான் இருக்கப்போகிறது.

தெய்வத்தமிழ் பேரவையின் பரப்புரை

x