குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு: பழைய குற்றாலத்தில் 17 வயது மாணவர் உயிரிழப்பு


பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் பாய்ந்தோடியதால் பதற்றத்துடன் ஓடி வந்த சுற்றுலா பயணிகள்.

தென்காசி: குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், பழைய குற்றாலத்தில் குளித்த 17 வயது மாணவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வானம்மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர் கோடை மழையால் கடந்தசில நாட்களாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

பழைய குற்றால அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் மதியம் சுமார் 2.30 மணியளவில் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேரிரைச்சலுடன் தண்ணீர் சீறிப் பாய்ந்ததால், அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பதற்றத்துடன் ஓடினர். சில விநாடிகளில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது.

படிக்கட்டுகளிலும் வெள்ளம்: அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள படிக்கட்டுகளிலும் வெள்ளம் அசுர வேகத்தில் பாய்ந்ததால், அங்கு குளித்துக் கொண்டு இருந்த சில சுற்றுலாப் பயணிகள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர். அவர்கள் உயரமான பகுதிகளில் ஏறி நின்று கொண்டு கூச்சலிட்டனர்.

தகவலறிந்து வந்த தென்காசி தீயணைப்புப் படையினர் மற்றும் போலீஸார், வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்டனர். இந்நிலையில், திருநெல்வேலி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் அஸ்வின் (17)என்ற மாணவர், தனது தாய்மாமாவுடன் பழைய குற்றால அருவிக்குகுளிக்க வந்ததும், அவர் வெள்ளத்தில் சிக்கி மாயமானதும் தெரியவந்தது. அவரைத் தேடும் பணியில்தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.

2 கிலோமீட்டர் தொலைவில்.. தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், எஸ்.பி. டி.பி.சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று, தேடுதல் பணியைத் துரிதப்படுத்தினர். நேற்று மாலை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரட்டைக் கால்வாய் பகுதியில் அஸ்வின் சடலம் மீட்கப்பட்டது.

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 2022ஜூலை 27-ம் தேதி குற்றால பிரதான அருவியில் இதேபோல திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் 5 பேர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், 2 பெண்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x