ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை: தூத்துக்குடியில் 11 டம்மி தீவிரவாதிகள் பிடிபட்டனர்


படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் 'ஆபரேஷன் சாகர் கவாச்' ஒத்திகை இன்று நடத்தப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் போல படகுகள் மூலம் வந்த 11 பாதுகாப்பு படையினரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடல் வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வபோது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், பயங்கரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுறுவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச் போன்ற பெயர்களில் ஒத்திகைகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் இன்று காலை முதல் 'ஆபரேஷன் சாகர் கவாச்' என்னும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் காலை முதல் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் சைரஸ் தலைமையில் போலீசார் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து சுமார் 8 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக ஒரு சிறிய படகு சென்றது. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இது போன்ற படகுகள் கிடையாது. தருவைகுளம் பகுதியில் உள்ள சிறிய படகுகள் குறிப்பிட்ட பகுதியில் செல்வது கிடையாது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் விரைந்து சென்று அந்த படகை மடக்கினர். அப்போது படகில் 3 பேர் இருந்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் பயங்கரவாதிகள் போன்று வந்த பாதுகாப்பு படையினர் என்பது தெரியவந்தது.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து மீண்டும் ரோந்து பணியை மேற்கொண்ட போது, 5 கடல் மைல் தொலைவில் வந்த மற்றொரு படகை சோதனை செய்தனர். அந்த படகில் இருந்த 5 பேரும், தொடர்ந்து 4 கடல் மைல் தொலைவில் வந்த மற்றொரு படகில் 3 பேரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3 படகிலும் வந்த 11 பேரையும் மடக்கி பிடித்தனர் அவர்களிடம் இருந்து 3 படகு மற்றும் 3 போலி வெடி குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் தனித்தனியாக பிரிந்து வந்து தூத்துக்குடி வஉசி துறைமுகம் மற்றும் தூத்துக்குடி நகரில் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த இருந்தது தெரியவந்தது. மேலும் சிலரும் கடலில் ஊடுறுவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியை தீவிரப் படுத்தியுள்ளனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி நாளை (ஜூன் 20) மாலை வரை நடைபெறுகிறது.