இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் ரூ.60,524 கோடி மதிப்புள்ள கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி


தூத்துக்குடி: இந்தியாவின் 2023- 2024-ம் நிதியாண்டில் ரூ.60,524 கோடி மதிப்பிலான 17,81,602 டன் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டுவதில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளில் இந்தியாவின் கடல் உணவு பொருட்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. இதனால் ஆண்டு தோறும் இந்தியாவின் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. 2023- 2024-ம் நிதியாண்டில் பல்வேறு சவால்களை ஏதிர்கொண்ட போதிலும் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மண்டல அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: 2023-2024-ம் நிதியாண்டில் முக்கிய ஏற்றுமதி சந்தையில் பல்வேறு சவால்களை எதிர் கொண்டபோதிலும் ரூ.60,523.89 கோடி மதிப்பிலான 17,81,602 மெட்ரிக் டன் கடல் உணவு பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2.67 சதவீதம் அதிகமாகும்.

மொத்த ஏற்றுமதியில் உறை பதன இறாலின் பங்கு 40.19 சதவீதம் ஆகும். 2023- 2024-ம் நிதியாண்டில் ரூ.40,013.54 கோடி மதிப்புள்ள 7,16,004 டன் உறை பதன இறால் ஏற்றுமதியாகியுள்ளது. உறை பதன இறாலை அமெரிக்காவே அதிகம் இறக்குமதி செய்துள்ளது. அமெரிக்கா 2,97,571 டன் உறை பதன இறால் இறக்குமதி செய்துள்ளது. அடுத்ததாக சீனா 1,48,483 டன், ஐரோப்பிய யூனியன் 89,697 டன், தென்கிழக்கு ஆசியா 52,254 டன், ஜப்பான் 35,906 டன், மத்திய கிழக்கு நாடுகள் 28,571 டன் இறக்குமதி செய்துள்ளன.

கரும்புலி இறால் (Black Tiger Shrimp) ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அளவு அடிப்படையில் 24.91 சதவீதமும், ரூபாய் மதிப்பு அடிப்படையில் 11.33 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2023- 2024-ல் ரூ.2,855.27 கோடி மதிப்புள்ள 38,987 மெட்ரிக் டன் கரும்புலி இறால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கரும்புலி இறாலுக்கான பிரதான இறக்குமதியாளராக சீனா உருவெடுத்துள்ளது. இதே நேரத்தில் வன்னாமி இறால் ஏற்றுமதி அளவு அடிப்படையில் 0.33 சதவீதம் அதிகரித்திருந்தாலும், அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையில் 11.56 சதவீதம் குறைந்துள்ளது.

உறை பதன மீன் ஏற்றுமதி அளவு அடிப்படையில் 3.54 சதவீதமும், ரூபாய் மதிப்பு அடிப்படையில் 0.12 சதவீதமும் அதிகரித்து ரூ.5,509.69 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்றுமதி 2.31 சவீதம் குறைந்துள்ளது. உறை பதன பீலிக்கணவாய் மீன் ஏற்றுமதி 11.52 சதவீதம் அதிகரித்து ரூ.3061.46 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.2,252.63 கோடி மதிப்பிலான 54,316 டன் உறைபதன கணவாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதான கடல் உணவு இறக்குமதியாளராக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 2-வது இடத்தில் சீனாவும், 3-வது இடத்தில் ஜப்பானும் உள்ளன. தொடர்ந்து வியட்நாம், தாய்லாந்து, கனடா, ஸ்பெயின், பெல்ஜியம், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.