திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் ‘வாழ்வின் உயிர்ப்பு’ என்ற தலைப்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
கரோனா பெருந்தொற்று காலங்களில், இந்த ஓவியப் பள்ளியின் மாணவர்கள் 38 பேர் ‘வாழ்வின் உயிர்ப்பு’ என்ற தலைப்பில் ஒவ்வொருவரும் தலா நான்கு ஓவியங்களை வரைந்துள்ளார்கள்.
அந்த ஓவியங்களை திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா ஹாலில் காட்சிப்படுத்தி, இன்றுமுதல் ஓவியக் கண்காட்சியை தொடங்கியுள்ளனர். இந்த கண்காட்சி பிப்.28-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு ஏழு மணி வரை நடைபெறுகிறது.
150-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ள இந்த கண்காட்சியை டைரி சகா, ஓவியர் சிவபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கருத்தியல் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளின் செறிவை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர். அது படைப்பாளிகளின் அணுகுமுறையையும், அவர்களது கருத்தியலையும் எடுத்துரைத்தது.
மேலும் இந்த கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டியும் நடைபெற்றது. சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கவிஞர் நந்தலாலா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா பிரிகேட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாட்டை டிசைன் ஓவியப் பள்ளியின் நிர்வாக இயக்குநர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் ஆகியோர் செய்திருந்தனர். பொதுமக்கள் அனைவரும் ஓவியக் கண்காட்சியை கண்டு களிக்கலாம். அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.