தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் சார்பில், வருகிற 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும், இதையொட்டி ரேஷன் கடைகளைப் பூட்டி அவற்றின் சாவிகளை மண்டல இணைப்பதிவாளர்களிடம் ஒப்படைக்கப் போவதாகவும் அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் (டாக்பியா) சங்கத்தின் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய 5 மாவட்ட போராட்ட ஆயத்த விளக்கக்கூட்டம் மதுரையில் இன்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் மதுரை ஆ.ம.ஆசிரியத் தேவன், புதுக்கோட்டை பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் சிறப்புரையாற்றினார். மதுரை மாவட்ட தலைவர் பாரூக் அலி நன்றியுரையாற்றினார்.
கூட்ட நிறைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சங்க மாநிலப் பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன், “இன்றைய கூட்டத்தின் வாயிலாக வருகிற 7.3.2022 முதல் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் (டாக்பியா) சங்கம் சார்பில் ரேஷன்களைப் பூட்டி கடைச் சாவிகளை மண்டல இணைப்பதிவாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த அறிவிப்பை உடனே நடைமுறைப்படுத்தக் கோரியும், ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள 14 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “ஒவ்வொரு அரசும் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்கிறபோது, அந்த நஷ்டத்தை ஈடுகட்ட வங்கிகளுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. இதனால் வங்கிகள் நலிவடைந்துவிடுகின்றன. எனவே, திமுக அரசு அறிவித்துள்ள, கூட்டுறவு வங்கிக் கடனில் 5 பவுன் வரையில் கடன் பெற்றவர்களின் கடனை தள்ளுபடி செய்யும் திட்டத்தைப் பொறுத்தவரை, இறுதி பயனாளிகள் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் உள்ள தொகையை கூட்டுறவு சங்கங்களின் நலன் கருதி உடனடியாக அரசு தந்துவிட்டு, அதன் பின்னரே கடன் தள்ளுபடி பலன்களை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்” என்றார்.