மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து இணையதள தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமின் பெற்றோருக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம், கடந்த 24-ம் தேதியன்று முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, அம்மாணவரின் பெற்றோர் ஆ.தில்ஷாத்பேகம், அ.அஸ்மத்துல்லாஹ் ஆகியோர் தாங்கள் குடியிருந்த சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் இருந்த வீடு வர்தா புயலால் இடிந்துவிட்டதாகவும், அதனை மீண்டும் கட்டுவதற்கு தங்களிடம் போதிய பொருளாதார வசதியில்லை எனவும், எனவே குடியிருக்க வீடு ஒன்று வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
அப்பெற்றோரின் வேண்டுகோளை பரிசீலித்த தமிழக முதல்வர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் ஒரு குடியிருப்பை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை வழங்கினார். ஒதுக்கீட்டு ஆணையினை பெற்றுக் கொண்ட மாணவர் ஏ.அப்துல் கலாமின் பெற்றோர், தமிழக முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.