உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களிடம் இன்று வீடியாே கால் மூலம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், `தைரியமாக, பாதுகாப்பாக இருங்கள்' என்று அவர்களை உற்சாக மூட்டினார்.
ரஷ்ய படைகள் உக்ரைனை நெருங்கி வரும் நிலையில், தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கிருக்கும் இந்தியர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். குறிப்பாக தமிழக மாணவர்கள் தங்களை உடனடியாக இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என கண்ணீருடன் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக அரசு தனி கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இங்கு ஒரு நாளைக்கு பல மாணவர்கள் பேசி வருகின்றனர். அவர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளனர். இதனிடையே, உக்ரைனில் இருந்து மாணவர்கள் பத்திரமாக திரும்பும் வகையில் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனால், பொருளாதார வசதியின்றி தவித்த மாணவர்களின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர கட்டுப்பாடு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். இதுவரை 1,500 பேர் உதவிக்காக பதிவு செய்துள்ள நிலையில், தமிழக மாணவர்களிடம் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தைரியமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், உணவு உள்ளிட்டவை கிடைக்கிறதா என மாணவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். முதல்வர் ஸ்டாலின் நேரிடையாகவே பேசியதால் மாணவர்கள் மத்தியில் புது நம்பிக்கை பிறந்துள்ளது.