கேரளத்தில் கார்ப்பரேட் கட்சி என அழைக்கப்படும் டிவெண்டி 20 கட்சியின் செயற்பாட்டாளர் தீபு மர்மமான முறையில் இறந்தார். இவ்விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ ஸ்ரீநிஜின் மீது டிவெண்டி 20 அமைப்பினர் குற்றச்சாட்டைக் கிளப்பியிருப்பது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020 கடந்துவந்த பாதை
பொதுவாகவே அரசியல் கட்சிகள் தங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பதை பொதுவெளியில் வெளிப்படுத்துவது இல்லை. அதிலும் கார்ப்பரேட்களிடம் இருந்து நிதி பெற்றால் சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் சூழலும் உண்டு. ஆனால் கேரளத்தில் தங்களை கார்ப்பரேட் நிறுவனத்தின் கட்சி என அறிவித்துக்கொண்டே களத்துக்கு வந்ததுதான் ட்வெண்டி20. ‘அன்னா கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ்’ என்னும் கார்ப்பரேட் நிறுவனத்தின் சமூகபங்களிப்பு நிதியில் இருந்தே இந்தக் கட்சி நடத்தப்படுகிறது. இந்த நிறுவனமானது டெக்ஸ்டைல்ஸ், அலுமினிய தயாரிப்பு எனப் பல தொழில்களையும் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சாபு எம் ஜாக்கப் தான் இந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்தக் கட்சியினர் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்தே எர்ணாக்குளம் மாவட்டத்தின் அரசியல், பொதுத்தளத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துவருகின்றனர்.
ஜனநாயகம் தழைக்க முதலில் உள்ளாட்சியில் இருந்து மாற்றத்தை விதைக்க வேண்டும் என்பதுதான் டிவெண்டி 20 அமைப்பினரின் கொள்கை. அந்தவகையில் கடந்த 2015ஆம் ஆண்டு எர்ணாக்குளம் மாவட்டத்தின் கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் மட்டும் தேர்தலை சந்தித்தது இந்தக்கட்சி. காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த இந்த பஞ்சாயத்தை களம்கண்ட முதல் தேர்தலிலேயே கைப்பற்றியது டிவெண்டி 20. அதிலும் கிழக்கம்பலத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் 17 வார்டுகளைக் கைப்பற்றி மார்க்சிஸ்ட், காங்கிரஸ் என இருகட்சிகளையும் அதிரவைத்தது. பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினருக்கு தங்கள் கார்ப்பரேட் நிதியில் இருந்து சம்பளமும் கொடுத்து புதுமைசெய்தது இந்தக் கட்சி. தொடர்ந்து கடந்தாண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கிழக்கம்பலத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் 18 வார்டுகளைக் கைப்பற்றியது. அதற்குக்காரணம் முந்தைய 5 ஆண்டுகளில் கிழக்கம்பலத்தில் பெருநகரங்களுக்கு இணையாக வசதிகளை செய்துகொடுத்ததுதான். கூடவே எர்ணாக்குளம் மாவட்டத்தில் ஏக்கரநாடு, குன்னத்துநாடு பஞ்சாயத்துக்களையும் கைப்பற்றியது. டிவெண்டி 20 கட்சியினரின் வளர்ச்சியை நோக்கிய பணிகள் அவர்களை மக்கள் மத்தியில் அதிகளவில் கொண்டு சேர்த்தது. இதுவே ஒருகட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் கோபத்திற்கும் இலக்கானது.
வளர்ச்சிக்கு எதிர்ப்பு
இந்நிலையில் தான் கிழக்கம்பலம் கிராமத்தில் தங்கள் சொந்த நிதியில் இருந்து அனைத்துத் தெருக்களிலும் தெரு விளக்கு வசதி செய்துதர டிவெண்டி 20 கட்சி திட்டமிட்டது. ஆனால் சொந்த நிதியில் இருந்து இந்தப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என மார்க்சிஸ்ட் முட்டுக்கட்டை போட்டது. இதைக் கண்டித்து கிழக்கம்பலம் உள்பட டிவெண்டி 20 கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்துப் பஞ்சாயத்துக்களிலும் விளக்கை அணைக்கும் போராட்டத்தை அந்தக் கட்சியினர் முன்னெடுத்தனர். இதற்கு ஆதரவாக ஆள்களைத் திரட்டிய பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரும், டிவெண்டி 20 அமைப்பின் தீவிர செயற்பாட்டாளருமான தீபு (38) என்பவர் மர்மமான முறையில் கடந்த 18 ஆம் தேதி இறந்தார்.
முன்னதாக அவர் கடந்த 12ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சியினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மையப்புள்ளியே மார்க்சிஸ்ட் கட்சியின் குன்னத்துநாடு எம்.எல்.ஏ ஸ்ரீனிஜன் தான் என குற்றஞ்சாட்டுகிறார் டிவெண்டி 20 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாபு எம்.ஜாக்கப்.
மறுக்கும் எம்.எல்.ஏ
இதுகுறித்து இந்துதமிழ் திசையிடம் அவர் கூறுகையில், ‘ஸ்ரீனிஜன் எம்.எல்.ஏ ஆனதில் இருந்து இதுவரை 50க்கும் அதிகமான எங்கள் தொண்டர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இப்போது தீபு விளக்கு அணைக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் எம்.எல்.ஏ தூண்டுதலாலேயே தாக்கப்பட்டார். அந்த தாக்குதலில்தான் அவர் இறந்தார். ஆனால் எம்.எல்.ஏவை விட்டுவிட்டு நான்கு மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’என்றார். ஆனால் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ ஸ்ரீனிஜனோ, ‘தாக்குதல் நடந்த மறுநாளே தீபு நடமாடியதை பலரும் பார்த்தார்கள். தீபுவுக்கு கல்லீரலில் நீண்டகாலமாக பிரச்சினை இருந்துவந்தது. நோயின் தீவிரத்தால்தான் அவர் உயிர் இழந்தார்’’ என்று குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.