நாடாளுமன்ற தேர்தலை ஸ்டாலினே தீர்மானிப்பார்: ஆ.ராசா


``வரும் நாடாளுமன்ற தேர்தலை திமுக தலைவர் ஸ்டாலினே தீர்மானிக்க உள்ளார்'' என நீலகிரி எம்பி ஆ.ராசா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா உதகையில் நடந்தது. நிகழ்ச்சியில், உதகை நகர செயலாளர் ஜார்ஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பா.மு.முபராக் தலைமை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ், விசிக மாவட்ட செயலாளர் சகாதேவன், கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் வாசு, பெள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், திமுக துணைப் பொது செயலாளர் மற்றும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசுகையில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கிடைத்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் மக்களுக்காக உழைப்பதற்கு வேறு வாய்ப்புகள் மற்றும் பணிகளை மாவட்ட கழகம் வழங்கும். 2024ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் என்ற முடிவை எடுக்கும் இடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளார் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலை திமுக தலைவர் ஸ்டாலினே தீர்மானிக்க உள்ளார். அதற்கு முன்னுதாரணமே தற்போது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றிக்கு காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலின்தான். உங்களது வெற்றி இந்தியாவுக்கே ஒரு செய்தி சொல்வதாக அமைந்துள்ளது. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், உள்ளாட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் மூலமே நிறைவேற்ற முடியும்.

உதகை நகராட்சியில் வெற்றி பெற்ற மூன்று சுயேச்சைகள் திமுகவில் இணைந்தனர்.

உங்களது வெற்றிக்கு காரணம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாதாரண திமுக தொண்டர்களே காரணம். எனவே, தொண்டர்களையும், வாக்களித்த பொதுமக்களையும் உள்ளாட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் போது, எவ்வித பாரபட்சமின்றி அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் அனைத்து வசதிகளும் சென்றடையும் வகையில், இங்கு வெற்றி பெற்றவர்கள் மேற்கொள்ள வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் அகில இந்திய அளவில் சிறந்து விளங்குகிறார். தமிழக முதல்வராக உள்ள அவரை அடுத்த நிலைக்கு, தேசிய அளவிலான இடத்துக்கு கொண்டுச் செல்ல நீங்கள் பாடுப்பட வேண்டும்" என்றார்.

இந்த கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டனர். உதகை நகராட்சியில் வெற்றி பெற்ற மூன்று சுயேச்சை கவுன்சிலர்கள் கஜேந்திரன், புளோரினா மற்றும் ரமேஷ் ஆகியோர் திமுக எம்பி ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதன் மூலம் உதகை நகராட்சியில் மொத்தமுள்ள 36 உறுப்பினர் பதவியிடங்களில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

x