‘நம்ம நாகர்கோவில்’ அழகைக்கெடுக்கும் கேபிள் கம்பம்


நம்ம நாகர்கோவில்

நாகர்கோவில் வடசேரி பகுதியில், இன்று புதிதாக வைக்கப்பட்டிருக்கும் நம்ம நாகர்கோவிலின் முன்னால் நிற்கும் கேபிள் வயர்களுக்கான கம்பம், அதன் அழகைக் கெடுப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர், நாகர்கோவில்வாசிகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரம், தமிழகத்திலேயே படித்தவர்கள் நிறைந்த பகுதி, நாகராஜருக்கு பிரத்யேக ஆலயம் உள்ள பகுதி என மட்டில்லா சிறப்புகளைக் கொண்டது நாகர்கோவில். இங்குள்ள வடசேரி கனகமூலம் சந்தை அருகில், அண்ணா சிலைக்கு எதிர்ப்புறத்தில் ‘நம்ம நாகர்கோவில்’ என்னும் ‘அடையாள இலச்சினை’ நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இதற்கென எழுத்துகள் வந்து சேர்ந்து, இன்று காலையே இதற்கான பணிகளும் முடிந்தன.

பொதுவாகவே இப்படியான எழுத்துகளின் முன்னால் நின்று செல்பி எடுத்துக் கொள்வதை, இளைஞர்கள் குழாம் பெரிதும் விரும்புவார்கள். ஆனால், இந்த ‘நம்ம நாகர்கோவில்’ லோகோவின் முன்பு கேபிள் வயர் செல்லும் கம்பி ஒன்று உள்ளது. அந்தக் கம்பியிலேயே சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுத்தால் இதுவும் சேர்ந்தே பதிவாகும் சூழல் உள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம், உடனே இந்த கம்பியை வேறு இடத்துக்கு நகர்த்திவைக்க வேண்டும் என நாகர்கோவில் மாநகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

x