வினோஜ் பி.செல்வத்துக்கு முன்ஜாமீன்; செளதாமணியின் மனு தள்ளுபடி


வினோஜ் பி.செல்வம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டது தொடர்பான வழக்கில் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் செளதாமணியின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில், பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது சமூக வலைதள பக்கத்தில், திமுக அரசு ஆட்சிக்கு வந்த 200 நாட்களில் 130 இந்து கோயில்களை இடித்துள்ளதாகவும், ஆகையால் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணியை ஆதரிப்பீர் என்று பதிவிட்டதாக, அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு திமுக அரசு குறித்து பொதுமக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பி, மதக் கலவரத்தைத் தூண்டி அமைதியை சீர்குலைக்கும் வகையில் இந்தப் பதிவு அமைந்திருக்கிறது. எனவே, வினோஜ் பி.செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணைக்குப் பிறகு, பொய்யான தகவலை பரப்பி மதக் கலவரத்தைத் தூண்டும்வகையில் அவரது பதிவு அமைந்துள்ளதால் கலகம் செய்யத் தூண்டுதல், எந்தவொரு பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவது உட்பட 3 பிரிவுகளின்கீழ் வினோஜ் பி.செல்வத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் செளதாமணி ட்விட்டரில் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் செளதாமணி ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், வினோஜ் பி.செல்வத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே நேரத்தில் தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் செளதாமணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனால் அவரை கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

x