“யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொலி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இணைய தொலைக்காட்சியில் வடசென்னைப் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் என்று சிறுவன் பேசியிருந்தான். அந்தச் சிறுவனிடம் உனக்குப் பிடிக்காதவர்கள் யார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘நான் யாரையும் வெறுக்க மாட்டேன். யாரும் யாரையும் வெறுக்கக்கூடாது. அனைவர் மீதும் அன்பு செலுத்த வேண்டும். சமூகத்தின் புறக்கணிப்பு ஒருவரை வன்முறையாளராக மாற்றும். ஒற்றுமை இல்லாம ஏன் இருக்கணும். நம்ம நாடு ஒற்றுமை நாடுன்னு சொல்றோம். ஒற்றுமை இல்லாம இருந்துச்சினா எப்படி? இந்தக் கருத்து எல்லோர்கிட்டயும் போய் சேரணும். அப்போதான், மனிதநேயம் போய் சேரும். மனித நேயம் இருக்கணும்” என்று பேசியிருந்தான். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுவன் அப்துல் கலாமையும், அவனது பெற்றோரையும் நேரில் அழைத்துப் பாராட்டினார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், “யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொலி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன. சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர்” என்று குறிப்பிட்டுள்ளார்.