துணைநிலை ஆளுநர் அனுமதி கிடைக்காததால் புதுச்சேரி, காரைக்காலில் சாராயக் கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல்


ஆளுநர்  சி.பி.ராதா கிருஷ்ணன்

புதுச்சேரி: கலால் துறை அனுப்பிய கோப்புக்கு துணைநிலை ஆளுநரின் அனுமதி கிடைக்காததால் புதுச்சேரி, காரைக்காலில் சாராயக் கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் கலால் துறை மூலம் ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கிறது. இதை அரசு பெருமளவில் நம்பியுள்ளது. மதுபானங்கள், சாராயம், ரெஸ்டோ பார் ஆகியவை மூலம் கிடைக்கிறது. இதில் ரூ.100 கோடி கள்ளுக்கடை, சாராயக் கடை மூலம் கிடைக்கிறது. இக்கடைகள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. முன்பு சாராயக் கடைகள், கள்ளுக்கடைகள் அதிகம் புதுச்சேரி, காரைக்காலில் இருந்தன. தற்போது சாராயத்தின் விலைக்கே மதுபானங்களும் கிடைப்பதால் கடைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போது புதுச்சேரியில் 85 சாராயக் கடைகளும், காரைக்காலில் 25 சாராயக் கடைகளும் உள்ளன. புதுச்சேரியில் 66 கள்ளுக்கடைகளும், காரைக்காலில் 26 கள்ளுக் கடைகளும் உள்ளன. சாராய, கள்ளுக்கடைகளுக்கான ஏலம் மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளன. ஜூலை 1-ம் தேதி முதல் புதிய ஏலத்தில் கடைகள் எடுக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும். இதற்கான கோப்பு கலால் துறை மூலம் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இக்கோப்புக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை என அரசு வட்டாரங்கள் மூலம் கூறப்படுகிறது. இதனால் சாராயம், கள்ளுக்கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் சாராயம், கள்ளுக்கடைகளுக்கான ஏலம் அனுமதி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.