உபி துணை முதல்வர் மவுரியாவிற்கு சவால்விடும் பல்லவி


சமாஜ்வாதி வேட்பாளர் பல்லவி பட்டேல்

உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வரான கேசவ் பிரசாத் மவுரியாவின் சிராத்து தொகுதி போட்டி சவாலாகி விட்டது. சமாஜ்வாதியில் போட்டியிடும் தன் மூத்த சகோதரியை எதிர்த்து பாஜகவிற்காக மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் பிரச்சாரம் செய்கிறார்.

முதன்முறையாக 2004இல் அலகாபாத்தின் மேற்கு தொகுதியின் மக்களவை தேர்தலில் கேசவ் பிரசாத் மவுரியா போட்டியிட்டார். இதில், கேசவ் மூன்றாவது நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். மீண்டும் அங்கு வந்த இடைத்தேர்தலில் பாஜகவிற்காகக் கேசவ் பிரசாத் போட்டியிட்டிருந்தார். இதிலும் மூன்றாவதாக வந்த கேசவ், பாஜகவிற்காக தனது சொந்த ஊரான சிராத்துவில் 2012 இல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார்.

உபி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா

அப்போது சமாஜ்வாதிக்கும் ஆதரவாக வீசிய அலையிலும் முதன்முறையாக எம்எல்ஏவானார் கேசவ் பிரசாத். இந்த வெற்றியால் கேசவிற்கு உபி பாஜகவில் முக்கியத்துவம் கூடியது. 2014 மக்களவை தேர்தலில் அருகிலுள்ள பூல்பூர் தொகுதியில் கேசவிற்கு பாஜக வாய்ப்பளித்தது. இதிலும் கேசவின் வெற்றி அவரை 2016இல் உபி மாநில தலைவர் பதவிக்கு உயர்த்தியது. 2017 சட்டப்பேரவை தேர்தலில் கேசவ் செய்த உழைப்பால் ஆட்சி அமைத்த பாஜக அவரை உபியின் துணை முதல்வராக்கியது.

தற்போது, உபியின் மேலவை உறுப்பினரான கேசவ், மீண்டும் இப்போது சட்டப்பேரவை தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார். இவரது வேட்புமனு தாக்கலின் போது பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் நேரில் வந்திருந்தார். உபி தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்தர் பிரதானுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் சிராத்துவில் வாக்கு சேகரித்தனர். இந்தமுறை கடந்த தேர்தல்களை போல் பிரதமர் மோடி அலையும் வீசவில்லை. உபியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிரான போக்கு மட்டும் ஆங்காங்கே உள்ளது. இச்சூழலில், மவுரியாவின் வெற்றிக்கு சவால் ஏற்பட்டுள்ளது.

மூத்த சகோதரி பல்லவி பட்டேலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல்

மவுரியாவை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் பல்லவி பட்டேல் போட்டியிடுகிறார். அப்னா தளம் கட்சியின் நிறுவனரான சோனுலால் பட்டேலின் மகள் இவர். குர்மி சமூகத்தை சேர்ந்த தந்தை சோனுலாலின் இறப்பிற்கு பின் அவரது கட்சி, இரண்டாகப் பிரிந்தது. இதில், இளைய சகோதரியான அனுப்பிரியா, அப்னா தளத்தின் பட்டேல் பிரிவின் தலைவராகி தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து வருகிறார். இவர் தனது உடன்பிறந்த சகோதரியை எதிர்த்து பாஜகவின் மவுரியாவிற்காகப் பிரச்சாரம் செய்திருந்தார்.

சோனுலால் பட்டேலின் மனைவி கிருஷ்ணா பட்டேலின் தலைமையில் அப்னா தளத்தின் கமராவதி பிரிவு செயல்படுகிறது. இக்கட்சி இந்தமுறை தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்துள்ளது. கிருஷ்ணா பட்டேலுடன் இருக்கும் மூத்த மகள் பல்லவி பட்டேலின் கணவர் சிராத்துவை சேர்ந்தவர். இதனால், தன்னை சிராத்துவின் மருமகள் எனக் கூறிப் பிரச்சாரம் செய்யும் பல்லவிக்கு ஆதரவாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங்கும் வந்திருந்தார். இதுவரையும் உபியின் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து விலகியிருந்த அகிலேஷின் மனைவியான டிம்பிள் யாதவும், பல்லவிக்காக சிராத்து வர உள்ளார். சிராத்துவில் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவாக பிப்ரவரி 27 இல் நடைபெற உள்ளது.

x